Published : 13 Aug 2021 09:28 AM
Last Updated : 13 Aug 2021 09:28 AM

11 ஆண்டுகளுக்குப்பின்: சேவாக், கம்பீர் ஜோடிக்குப்பின் இப்போது ரோஹித்,ராகுல் இணை மைல்கல்

இங்கிலாந்துக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் கே.எல்.ராகுல் | படம் உதவி ட்விட்டர்

லண்டன்


லண்டனில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க ஜோடி ரோஹித், ராகுல் ஆகியோர் 11 ஆண்டுகளுக்குப்பின் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் லார்ட்ஸ் மைதானத்தில் 69 ஆண்டுகளுக்குப்பின் புதிய வரலாற்றையும் பதிவு செய்துள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. 2-வது டெஸ்டின் முதல்நாள் ஆட்டநேரமுடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்துள்ளது இந்திய அணி. கே.எல்.ராகுல் 127 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முதல் விக்ெகட்டுக்கு கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா 126 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ரோஹித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். SENA எனச் சொல்லப்படும் தென் ஆப்பிரி்க்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் இன்னும் ரோஹித் சர்மா சதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார்.

முதல் விக்ெகட்டுக்கு கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா 126 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இதன் மூலம் 69 ஆண்டுகளுக்குப்பின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

இதற்கு முன் கடந்த 1952-ம் ஆண்டு வினு மண்கட், பங்கஜ் ராய் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்திருந்தனர்.அதன்பின் பலமுறை இந்திய அணி இங்கிலாந்து பயணத்தில் லண்டனில் விளையாடியபோதிலும், தொடக்க ஜோடி சதம் கண்டதில்லை. 69 ஆண்டுகளுக்குப்பின் ராகுல், ரோஹித் சதம் அடித்து அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் வென்ற எதிரணி பீல்டிங் செய்து பேட்டிங் செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்ட அணியில் தொடக்க ஜோடி அடித்த அடித்த அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் இங்கிலாந்தின் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ், அலிஸ்டார் குக் ஜோடி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 114 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சம் அதை ரோஹித், ராகுல் முறியடித்துவிட்டனர்.

ஆசிய கண்டத்துக்கு வெளியே இந்திய அணியின் தொடக்க ஜோடி 11 ஆண்டுகளுக்குப்பின் லார்ட்ஸ் மைதானத்தில்தான் சதம் அடித்துள்ளனர். கடைசியாக 2010ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சென்சூரியன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சேவாக், கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தனர்.

அதன்பின் ஆசியக் கண்டத்துக்கு வெளியே பல நாடுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியபோதிலும் எந்த ஆட்டத்திலும் தொடக்க ஜோடி சதம் அடித்தது இல்லை. 11 ஆண்டுகளுக்குப்பின் கே.எல்.ராகுல், ரோஹித் ஜோடி சதம் அடித்துள்ளனர்.

லாட்ர்ஸ் மைதானத்தில் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே சதம் அடித்திருந்தார். அதன்பின் 7 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவின் சார்பில் ராகுல் சதம் அடித்துள்ளார்.

லாட்ர்ஸ் மைதானத்தில் இதுவரை 9 இந்திய வீரர்கள் சதம் அடித்துள்ளனர். இதில் 10-வது வீரராக கே.எல்.ராகுல் இணைந்துள்ளார். அதிகபட்சமாக திலீப் வெங்சர்க்கார் 3 சதங்கள் அடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x