Published : 12 Aug 2021 05:55 PM
Last Updated : 12 Aug 2021 05:55 PM

'என்னை இந்தியர்கள் உயிரோடு கொளுத்தியிருப்பார்கள்': சச்சின் குறித்து ஷோயப் அக்தர் ரீவைண்ட்

ஷோயிப் அக்தர், சச்சின் டெண்டுல்கர் | படம் உதவி ட்விட்டர்

இஸ்லாமாபாத்


சச்சினுக்கு மட்டும் காயம் ஏற்பட்டிருந்தால், எனக்கு பாகிஸ்தானுக்கு விசா கிடைத்திருக்காது, என்னை இந்தியர்கள் உயிரோடு கொளுத்தியிருப்பார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்தார்.

கிரிக்ெகட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் என்றால் இந்த ஆட்டத்துக்குரிய பரபரப்பு வேறு எந்தஆட்டத்துக்கும் கிடையாது, இரு அணிகளும் விளையாடும் போட்டி என்றாலே பார்ப்பது தனி உற்சாகமாத்தான் இருக்கும். ஆனால், சமீபகாலமாக இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சினை, எல்லைப் பிரச்சினை காரணமாக ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் விளையாடுகிறார்கள்.

இந்தியாவுக்கு பயணம் செய்து விளையாடிய காலம் மறக்க முடியாதது, எங்களுக்கு மற்றொரு தாய்நாடு இந்தியா என்று மகிழ்ச்சி பொங்க, உணர்ச்சிகரமாக பல பாகிஸ்தான் வீரர்கள் பேசியுள்ளனர். அந்த வகையில் இணையதளம் ஒன்றுக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

பாகிஸ்தானுக்குப்பின் எனக்கு அதிகமான அன்பையும், வரவேற்பையும் அளித்த நாடு இந்தியாதான். இந்தியப் பயணத்தின் போது மறக்க முடியாத பலநினைவுகள் இருக்கின்றன. கடந்த 2007-ம் ஆண்டு பயணத்தின் போது, ஒருபோட்டியில் வென்றுவிட்டு, விருது வழங்கும் விழாவுக்காக இருஅணிகளும் காத்திருந்தோம்.

வழக்கம்போல் நான் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என நினைத்தேன். சச்சின் டெண்டுல்கருக்கு விருது கொடுத்தவுடன் திடீரென அவரைத் தூக்கினேன். இதை சச்சின் கூட எதிர்பார்க்கவில்லை. விளையாட்டுக்காகத் தூக்கினேன், ஆனால், என்னால் சச்சினை பேலன்ஸ் செய்ய முடியாமல் திடீரென கைகளை விட்டுவிட்டேன். சச்சின் தரையில் விழுந்தார்.

சச்சின் கீழே விழுந்ததைப் பார்த்தவுடன் எனக்கு இதயத்துடிப்பு எகிறியது. நான் செத்தேன் , என்னை தொலைத்துக்கட்டப்போகிறார்கள் என மனதுக்குள் பயந்தேன்.

சச்சினுக்கு மட்டும் ஏதேனும் உள்காயம் ஏற்பட்டிருந்தால், நான் ஒருபோதும் இனிமேல் இந்தியா விசா பெற முடியாது. நிச்சயமாக இந்தியாவை விட்டு என்னை உயிரோடு இந்திய ரசிகர்கள் அனுப்பமாட்டார்கள், அல்லது உயிரோடு கொளுத்திவிடுவார்கள் என அச்சப்பட்டேன்.

ஆனால், மருத்துவர் வந்து பரிசோதித்த பின் சச்சினுக்கு எந்த காயமும் இல்லை. நலமாக இருக்கிறார் எனத் தெரிவித்தபின்புதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. சச்சினை தூக்கி கிழே விழச்செய்தபின், இதை ஹர்பஜன் சிங்கும், யுவராஜ் சிங்கும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும், என்னிடம் வந்து என்ன செய்திருக்கிறாய் தெரியுமா என்றனர்.

அதற்கு நான், “ உண்மையில் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது” என்று அவர்களிடம் தெரிவத்தேன். தவறு நடந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டு சச்சினிடம் சென்று அவரைக் கட்டித்தழுவி உங்களுக்கு ஏதும் காயமில்லையே என்று கேட்டேன். அதற்கு சச்சினும், “நான் நலமாக இருக்கிறேன் ஒன்றுமில்லை” என்று என்னிடம் தெரிவித்தார்.

அதன்பின் சச்சினிடம் “ உங்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தால், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மிகப்பெரிய சிக்கலில் முடிந்திருக்கும்.குறிப்பாக இந்திய ஊடகங்களும் , ரசிகர்களும் என்னை ஏதாவது செய்திருப்பார்கள்" என்று சொல்விட்டு திரும்பினேன்.

ஆனால், அந்தத் தொடரில் என் பந்துவீச்சை சச்சின் துவைத்து எடுத்தார், சச்சினுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருக்க கூடாதா என்று என் பந்துவீச்சை வெளுத்து வாங்கியபோது நான் நினைத்தேன்
இவ்வாறு அக்தர் தெரிவி்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x