

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா உலகத் தரவரிசையில் உச்சத்துக்குச் சென்றுவிட்டார்.
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர், நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி முனையைச் செலுத்தினார். 2-வது முயற்சியில் அதைவிடக் கூடுதலாக 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அதன்பின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று 2-வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் 120 ஆண்டுகளில் ஈட்டி எறிதலில் இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதலில் 14 இடங்கள் முன்னேறி 2-வது இடத்துக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமாக முன்னேறியுள்ளார்.
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் ஜெர்மன் வீரர் ஜோஹன்னாஸ் வெட்டர் 1,396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 1,315 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
உலக தடகளத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது “ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக, நீரஜ் சோப்ராவுக்கு அதிகமான ஃபாலோவர்ஸ் இருந்தனர். ஆனால், ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய சார்பில் தடகளத்தில் முதன்முதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றபின், அவரின் ப்ரோஃபைல் உச்சத்துக்குச் சென்றுவிட்டது” எனத் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் நீர்ஜ் சோப்ராவுக்கு 1.43 லட்சம் ஃபாலோவர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக இருந்தனர். ஆனால், தங்கம் வென்றபின் நீரஜ் சோப்ராவை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 32 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகளவில் டிராக் பீல்ட் தடகளவீரர்களில் அதிக அளவு ஃபாலோவர்ஸ் கொண்டவர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுவிட்டார்.