Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் நேற்று தாயகம் திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. படங்கள்: பிடிஐ

புதுடெல்லி

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்பட வெற்றிகரமாக செயல்பட்ட இந்திய குழு நேற்றுதாயகம் திரும்பியது. அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் நீரஜ் சோப்ரா, ரவி குமார் தஹியா, பஜ்ரங் புனியா, லோவ்லினா போர்கோஹெய்ன் உள்ளிட்ட தடகள வீரர்களை இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில் சுமாரிவாலா மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் சந்தீப் பிரதான் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் திரளான ரசிகர்கள் திரண்டு வீரர்களை மேளதாளங்கள் முழங்க பலத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். மேலும் நடனம் ஆடியும், பாட்டு பாடியும் தங்களது அபிமான நாயகர்களை மகிழ்ச்சியடைய செய்தனர். விமான நிலையத்திற்கு வீரர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வந்திருந்தனர். விளையாட்டு வீரர்களுக்கு மாலை அணிவிக்கப் பட்டு, பூங்கொத்துகள் வழங்கப் பட்டன.

ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியா சார்பில் 126 வீரர், வீராங்கனைகள் அடங்கிய குழு பங்கேற்றிருந்தது. இதில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருந்தார். அதேவேளையில் மீராபாய் சானு, ரவிகுமார் தஹியா ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தனர். குத்துச்சண்டையில் லோவ்லினாபோர்கோஹெய்ன், பாட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, ஹாக்கியில் ஆடவர் அணியினர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தனர்.

பாராட்டு விழா

தாயகம் திரும்பிய ஒலிம்பிக் சாம்பியன்களுக்கு டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, பி.வி.சிந்து ஆகியோரை தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று சாதனை படைத்த ஆடவர் ஹாக்கி அணியி னர் அனைவரும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x