Published : 09 Aug 2021 04:21 PM
Last Updated : 09 Aug 2021 04:21 PM

பார்சிலோனா அணியில் தொடர முயன்றேன்; 50% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சம்மதித்தேன்: மெஸ்ஸி கண்ணீர்

பார்சிலோனா கிளப் அணியில் இருக்க என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்தேன் என்று லியோனல் மெஸ்ஸி கண்ணீர் சிந்தினார்.

நிதி மற்றும் கட்டமைப்புத் தடைகள் காரணமாக மெஸ்ஸி மற்றும் பார்சிலோனா அணிக்கு இடையேயான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. பார்சிலோனா அணியிலிருந்து மெஸ்ஸி வெளியேறுகிறார் என்று பார்சிலோனா நிர்வாகம் அறிவித்தது கால்பந்து ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பார்சிலோனா அணியிலிருந்து தனது விலகலை உறுதிப்படுத்தியிருக்கிறார் மெஸ்ஸி.

இதுகுறித்து அந்த அணி சார்பாக நடத்தப்பட்ட பிரியா விடை நிகழ்வில் மெஸ்ஸி பேசும்போது, ''அணியில் நீடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தேன். என் தலையில் நிறைய விஷயங்கள் ஓடுகின்றன. இன்னும் பார்சிலோனா அணியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற யதார்த்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பார்சிலோனா அணியில் நான் அறிமுகப்படுத்தப்பட்டதை என்னால் மறக்க முடியாது. எல்லாம் எங்கு தொடங்கியதோ அதனை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். நான் அணியிலிருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தேன். எனது சம்பளத்திலிருந்து 50% குறைத்துக் கொள்ளக்கூட நான் சம்மதித்தேன். நம் அனைவருக்கும் நல்ல காலமும் இருக்கும், கெட்ட காலமும் இருக்கும். ஆனால், எப்போதும் மனிதர்கள் மீது வைத்திருக்கும் அன்பு மாறாது” என்று கண்ணீருடன் மெஸ்ஸி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எந்த கிளப் அணிக்காக விளையாட உள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க மெஸ்ஸி மறுத்துவிட்டார்.


தனது 13-வது வயதில் பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி 21 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 34-வது வயதில் அந்த அணியிலிருந்து வெளியேறுகிறார்.

அர்ஜென்டினாவில் ரோசாரியோ நகரில் பிறந்த லயோனல் மெஸ்ஸி, சிறு வயது முதலே கிளப்புகளுக்கு ஆடும் அளவுக்குத் தனது கால்பந்து திறமையை உயர்த்திக்கொண்டார். ஆனால், இந்தச் சூழ்நிலையில் ஹார்மோன் டிபிஷியன்ஸி எனப்படும் வளர்ச்சிக் குறைபாடு நோய் மெஸ்ஸியை பாதித்தது. இதனால் அவர் உயரமாக வளர்வது தடைப்பட்டது. அவர் வளர வேண்டுமானால் தினமும் ஒரு ஊசியைப் போடவேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால், ஊசியை வாங்க மெஸ்ஸியின் தந்தையிடம் காசு இல்லை. அர்ஜென்டினாவில் உள்ள பல்வேறு கிளப்புகளும் அவருக்கு உதவ மறுத்தன.

இந்த நிலையில்தான் பார்சிலோனா கால்பந்து கிளப்பின் இயக்குநரான கார்லோஸ் ரெக்சாக், மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தார். ஆனால், அப்படிச் செய்ய வேண்டுமானால் ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக ஆடவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தம் மெஸ்ஸியின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x