

2018-ம் ஆண்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வீரர், குஜராத்தின் நவ்சாரி நகரில் வறுமையால் காய்கறி விற்பனை செய்தும், கூலி வேலை செய்தும் வருகிறார்.
2018-ம் ஆண்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்தது. இதில் துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 2 விக்கெட்டில் வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அப்போது இருந்த இந்திய அணியில் இடம் பெற்றவர் நரேஷ் தும்டா. இவர் குஜராத் மாநிலம், நவ்சாரியைச் சேர்ந்தவர்.
இந்திய அணிக்காக பிளேயிங் லெவனில் பல முறை உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் தும்டா விளையாடினார்.
தற்போது கரோனா வைரஸ் பாதிப்பால் பிழைப்புக்கு வழியில்லாமல் நவ்சாரியில் காய்கறிகள் விற்பனை செய்தும், சில நேரங்களில் கட்டிட வேலைக்குச் சென்றும் வாழ்க்கை நடத்தி வருகிறார். அடுத்த உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில் பயிற்சி எடுக்கவோ வழியில்லை, அரசின் சார்பிலும், பிசிசிஐ சார்பிலும் உதவித்தொகையும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து நரேஷ் தும்டா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''நான் 2018-ம் ஆண்டு நடந்த பார்வை மாற்றுத்திறனாளி உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தேன். ஆனால், தற்போது கரோனா வைரஸால் வறுமைக்குத் தள்ளப்பட்டு, நாள்தோறும் ரூ.250க்கு கூலி வேலைக்குச் செல்கிறேன். சில நேரங்களில் காய்கறி விற்பனை செய்கிறேன்.
குஜராத் முதல்வரை 3 முறை அரசு வேலை தரக்கோரி வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை. என்னுடைய குடும்பத்தைக் கவனிக்க எனக்கு அரசாங்கத்தில் ஏதாவது ஒருவேலை தர வேண்டும் என வேண்டுகிறேன்.
உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பியபின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றோம். அனைவரும் எங்களை வாழ்த்தினர். உலகக் கோப்பையை வென்றபின் எப்படியும் எனக்கு ஏதாவது அரசு வேலை கிடைக்கும் என நினைத்தேன் இதுவரை வேலை கிடைக்கவில்லை. என் குடும்பத்தின் நிலைகருதி வேலை வழங்க பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்''.
இவ்வாறு தும்டா தெரிவித்தார்.