

தங்கப் பதக்கத்தை இந்தியத் தடகள நட்சத்திரம் மில்கா சிங்கிற்கு அர்ப்பணிப்பதாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டி இன்று தொடங்கியது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர் தூரமும், இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரமும், மூன்றாவது வாய்ப்பில் 76.79 மீட்டர் தூரமும் ஈட்டியைப் பாயவிட்டார். நான்காவது முயற்சி தோல்வியில் முடிந்தாலும் கூட அவர் தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைவர்களும், பிரபலங்களும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது வெற்றி குறித்து தனியார் செய்தி சேனலுக்கு நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில் கூறும்போது, ''நான் தங்கப் பதக்கத்தைப் பற்றி நினைக்கவில்லை. தனிப்பட்ட ரீதியாக இன்று எனது சிறப்பான ஆட்டத்தை வழங்குவேன் என்று நன்கு தெரியும். இந்தப் பதக்கத்தை தடகள நட்சத்திரம் மில்கா சிங்கிற்கு அர்ப்பணிக்கிறேன். தங்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது.'' என்று தெரிவித்துள்ளார்.