தேசத்துக்காக விளையாடுகிறோம்; சாதி பற்றி பேசாதீர்கள்: வந்தனா கட்டாரியா வேதனை

இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா | கோப்புப்படம்
இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா | கோப்புப்படம்
Updated on
1 min read

நாங்கள் தேசத்துக்காக விளையாடுகிறோம், சாதி பற்றிப் பேசுவது கூடாது என்று ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா வேதனை தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் பெண் வந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி வீராங்கனை வந்தனாவுக்கு ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று அறிவித்துள்ளார்.

ஹரித்துவார் மாவட்டம் ரோஷனாபாத் நகரில் வந்தனா கட்டாரியா வசித்து வருகிறார். அர்ஜென்டினா அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்த செய்தி கேட்டதும், இரு நபர்கள் ரோஷனாபாத்தில் உள்ள வந்தனாவின் வீட்டின் முன்பு வந்து நின்று நடனமாடிக் கிண்டல் செய்து, பட்டாசுகளை வெடித்து சாதிரீதியாக அவதூறு பேசினர். இது தொடர்பாக வந்தனா குடும்பத்தினர் அளித்த புகாரில் அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரிட்டன் அணிக்கு எதிரான வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 3-4 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டிக்குப் பின் வந்தனா கட்டாரியா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் சமீபத்தில் உங்கள் குடும்பத்தாரிடம் சென்று உங்கள் சாதி பற்றி இருவர் அவதூறு பேசியது குறித்துக் கேட்டனர்.

அதற்கு வந்தனா பதில் அளிக்கையில், “என் குடும்பத்தாருக்கு நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றி அறிந்தேன். என்னுடைய செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்ததால், அந்த சமயம் எனக்குத் தெரியாது. அதன்பின்புதான் அறிந்தேன். இதுவரை என் குடும்பத்தாரிடம் நான் பேசவில்லை. என் குடும்பத்தாரிடம் பேசிவிட்டு பதில் அளிக்கிறேன் .

நாங்கள் தேசத்துக்காக விளையாடுகிறோம். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், நான் கேட்ட விஷயங்கள், சாதிரீதியாகப் பேசுவது ஏதும் இனிமேலும் நடக்கக் கூடாது. ஹாக்கியை மட்டும் சிந்திப்போம், நாங்கள் இளம் வீராங்கனைகள். நாட்டுக்காக விளையாடுகிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தேசம் என்ற எண்ணத்தில் ஒன்று சேர்ந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in