ஹாக்கி வீராங்கனை வந்தனாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு: உத்தரகாண்ட் அரசு

இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா | கோப்புப்படம்
இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா | கோப்புப்படம்
Updated on
1 min read

ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு இன்று அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் பெண் வந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ உத்தரகாண்ட் மாநிலத்தின் மகள் வந்தனா கட்டாரியாவை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். டோக்கியோவில் நடந்த மகளிர் ஹாக்கியில் மறக்கமுடியாத பங்களிப்பு செய்துள்ளார். அவரின் திறமையைப் பாராட்டி ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு அரசு சார்பில் வழங்கப்படும். பல்வேறு விளையாட்டுகளில் இளைஞர்களின் திறமையை வளர்க்கவும், ஊக்குவிக்கவும், விரைவில் புதிய விளையாட்டுக் கொள்கை அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்திய மகளிர் சீனியர் ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள வந்தனா இதுவரை 200க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் மகளிர் அணி வென்றுள்ளது.

ஹரித்துவார் மாவட்டம் ரோஷனாபாத் நகரில் வந்தனா கட்டாரியா வசித்து வருகிறார். அர்ஜென்டினா அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்த செய்தி கேட்டதும், இரு நபர்கள் ரோஷனாபாத்தில் உள்ள வந்தனாவின் வீட்டின் முன்பு வந்து நின்று நடனமாடிக் கிண்டல் செய்து, பட்டாசுகளை வெடித்து சாதிரீதியாக அவதூறு பேசினர். இது தொடர்பாக வந்தனா குடும்பத்தினர் அளித்த புகாரில் அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in