Last Updated : 07 Aug, 2021 09:55 AM

 

Published : 07 Aug 2021 09:55 AM
Last Updated : 07 Aug 2021 09:55 AM

வங்கதேசம் வரலாறு: முதல்முறையாக டி20 தொடரை வென்றது: அசிங்கப்பட்ட ஆஸி.; பந்துவீச்சில் படம்காட்டிய ரஹ்மான் 

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வங்கதேச அணியினர் | படம் உதவி ட்விட்டர்

தாஹா


முஸ்தபிசுர் ரஹ்மானின் பிரமாதமான பந்துவீச்சு, மகமுதுல்லாவின் அரைசதம் ஆகியவற்றால் தாஹாவில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 10ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

முதலி்ல் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. 128 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை வங்கதேச அணி கைப்பற்றியுள்ளது. முக்கியமான நேரத்தில் களமிறங்கி அரைசதம் அடித்த கேப்டன் மகமுதுல்லாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி கடந்த ஓர் ஆண்டில் தொடர்ச்சியாக 5-வது டி20 தொடரை இழக்கிறது. இதற்கு முன், இங்கிலாந்து, நியூஸிலாந்து, இந்தியா, மே.இ.தீவுகள், தற்போது வங்கதேசமாகும்.

அதுமட்டுமல்லாமல் ஓர் இலக்கை சேஸிங் செய்து, அதில் தொடர்ந்து 8-வது முறையாக ஆஸ்திரேலிய அணி தோல்விஅடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை கோட்டை விட்டது என்று சொல்வதைவிட, வெற்றியைத் தாரைவார்த்துவிட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு கடைசி 4 ஓவர்களில் ஆட்டத்தை சொதப்பிவிட்டனர். வங்கதேச இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் கடைசி நேரத்தில் இரு டெத் ஓவர்களை வீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு படம் காட்டிவிட்டார்.

கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவை. களத்தில் மார்ஷ், கேரே இருவரும் இருந்தனர். முஸ்தபிசுர் ரஹ்மான் தனது 17-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடுத்துவீசிய சோரிபுல் இஸ்லாம் ஓவரில் 11 ரன்கள் சேர்த்து மார்ஷ் விக்கெட்டைஇழந்தது.

கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவை. 19-வது ஓவரை மீண்டும் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசி, டேன் கிறிஸ்டியன், கேரே இருவருக்கும் தண்ணிகாட்டி ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை, மெஹதி ஹசன் பந்துவீசி 11 ரன்கள் மட்டுமே வழங்க ஆஸ்திரேலிய தோல்வி உறுதியானது.

128 ரன்களை சேஸிங் செய்யமுடியாமல் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது அசிங்கத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது, கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தபோதிலும் இந்த எளிய ஸ்கோரை சேஸ் செய்ய முடியவில்லை.

ஆஸ்திரேலிய டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட மேத்யூ வேட் அல்ல அவர் மேத்யூ வேஸ்ட். கடந்த 3 போட்டகளிலும் 5 ரன்கள்கூட அடிக்கவில்லை. இவரை எவ்வாறு கேப்டனாகத் தேர்வுசெய்தார்கள் எனத் தெரியவில்லை.

ஆஸ்திரேலிய அணியில் கடந்த 3 போட்டிகளாக தொடர்ந்து சிறப்பாக பேட் ெசய்துவருவபர் ஷான் மார்ஷ் மட்டும்தான். இந்த ஆட்டத்தில்அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த இரு ஆட்டங்களிலும் 45 ரன்களுக்கு மிகாமல் அடித்தார். மற்றவகையில்ஆஸி அணியில் மெக்டெர்மார்ட் 35 ரன்கள் 41 பந்துகளில் சேர்த்தார். கேரே 20 ரன்களும், ரி்ச்சர்ட்ஸன் 7 ரன்களும் சேர்த்தனர்.

வங்கதேச அணியைப் பொறுத்தவரை முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. 4 ஓவர்கள்வீசி 9 ரன்கள் கொடுத்து டி20 போட்டியில் குறைவான எக்கானி வைத்த 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வெளிப்படுத்தி பந்துவீசும் ரஹ்மானின் பந்தை அடிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். அதிலும் கடைசி இரு ஓவர்கள் டெத் ஓவர்களாக வீசி வெற்றியை வங்கதேச அணிக்கு உறுதி செய்தவர் ரஹ்மான்தான்.

இதற்கு முன் நடந்த இரு போட்டிகளிலும் 16ரன்களுக்கு 2 விக்கெட், 23 ரன்களுக்கு 3 விக்கெட் என ரஹ்மான் பந்துவீச்சில் அசத்தியுள்ளார். 127 ரன்கள் சேர்த்து அந்த ஸ்கோரை டிபென்ட் செய்துள்ளது வங்கதேசம் என்றால், அதற்கு முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சு முக்கியக் காரணம்.

மற்ற வகையில் டி20 போட்டியில் 127 ரன்கள் என்பது மிகவும் குறைவான ஸ்கோர், நல்ல ஸ்கோர் என்று கூற முடியாது. இந்த ஸ்கோரில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை டிபென்ட் செய்திருப்பது வங்கதேச அணியின் பந்துவீச்சுக்கு சான்றாகும், அதேநேரம், ஆஸ்திரேலிய அணியின் மட்டமான பேட்டிங்கும் காரணமாகும்.

வங்கதேச அணியில் கேப்டன் மகமுதுல்லா மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 3 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறியபோது, சஹிப் அல் ஹசன், மகமுதுல்லா கூட்டணிதான் அணியை சரிவிலிருந்து மீட்டது.சஹிப் அல் ஹசன் 26, ஆசிப் ஹூசைன் 19 ரன்கள் சேர்த்தனர் மற்ற வகையில் எந்த வீரரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

ஆஸ்திரேலிய அணியில் மிகப்பெரிய ஆறுதலான விஷயம் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 20 ஓவரில் மகமுதுல்லா, முஸ்தபிசுர் ரஹிம், மெகதிஹசன் விக்கெட்டுகளை வீழ்த்தி எல்லீஸ் சாதனை நிகழ்த்தினார்.

மற்ற வகையில் ஆஸ்திரேலிய அணியில் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் வெற்றி பெற முடியவில்லை. ஹேசல்வுட், ஸம்ப்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x