Last Updated : 07 Aug, 2021 08:25 AM

 

Published : 07 Aug 2021 08:25 AM
Last Updated : 07 Aug 2021 08:25 AM

இந்திய அணி 95 ரன்கள் முன்னிைல: சதத்தை தவறவிட்ட ராகுல், அரைசதம் அடித்த ஜடேஜா

இந்திய அணி வீரர்கள் கேஎல் ராகுல், ரிஷப் பந்த் | படம் உதவி ட்விட்டர்

நாட்டிங்ஹாம்


கே.எல்.ராகுலின் பொறுப்பான ஆட்டம், ஜடேஜாவின் அரைசதம் ஆகியவற்றால் நாட்டிங்ஹாமில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்து 95 ரன்கள் முன்னிலை பெற்றது.

2-வது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 11.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இருக்கிறது. மழை காரணமாக நேற்றைய ஆட்டத்திலும் 49 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. ரோரி பர்ன்ஸ் 11 ரன்களிலும், சிப்ளி 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
கே.எல்.ராகுல் 84 ரன்களில் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 205 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்து. இன்னும் சில ரன்களுக்குள் இ்ந்திய அணியின் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று கருதப்பட்டது.

ஆனால், இந்திய அணியின் டெய்ல்என்டர்கள் பேட்ஸ்மேன்கள் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் ஓரளவுக்கு நிலைத்து ஆடி 73 ரன்கள் சேர்த்தனர். இவர்களுக்குத் துணையாக ஜடேஜா களத்தில் இருந்து அணியின் ஸ்கோரை நகர்த்தினார். அதிலும் பும்ரா, சிராஜ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டி 33 ரன்கள் சேர்த்தது அருமையானது.

அதிலும், பும்ராவின் ஒரு சிக்ஸர், 3பவுண்டரிகள் உள்ளிட்ட 28 ரன்கள் இந்திய அணியின் முன்னிலை ரன்களுக்கு மிக முக்கியமானது. ஷமி 13, சிராஜ் 7 ரன்கள் சேர்த்தனர்.

ஆல்ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்த ஜடேஜா டெஸ்ட் அரங்கில் 15-வது அரைசதத்தைப் பதிவு செய்து டெஸ்ட் அரங்கில் 2 ஆயிரம் ரன்களையும் நிறைவு செய்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 84 ரன்கள் சேர்த்து சதத்தை தவறவிட்டார்.

இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாத வெற்றிடம் நன்றாகத் தெரிகிறது. ஆன்டர்ஸன், ராபின்ஸன் பந்துவீச்சைத் தவிர வேறு யார் பந்துவீச்சும் எடுபடவில்லை. ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சு 2-வது நாளாக சொதப்பலாக இருந்தது, சாம்கரன் பந்துவீச்சை ஐபிஎல் தொடரில் அடித்து பழகியதால் இந்திய வீரர்கள் எளிதாக எதிர்கொள்ள முடிந்தது.

இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் இல்லாதது பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 3 கேட்சுகளை தவறவிட்டது, 5 ரன் அவுட்களை தவறவிட்டது போன்றவற்றால், இந்தியாவின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் 73 ரன்கள் சேர்க்க முடிந்தது.

முன்னதாக 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டதால்ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 3-வதுநாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ராகுல் 57 ரன்களிலும், ரிஷப்பந்த் 7 ரன்களிலும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ரிஷப்பந்த் அதிரடியாக சில பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை உயர்த்தினார், ஆனால் நீண்டநேரம் களத்தில் நிற்காமல் 25 ரன்னில் ராபின்ஸன் பந்துவீச்சில் வெளிேயறினார். அடுத்துவந்த ஜடேஜா, ராகுலுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அணியின்ஸ்கோரை மெல்ல நகர்த்திச் சென்றனர். இங்கிலாந்து பந்துவீச்சாள்கள் வீசிய மோசமான பந்துகளை அவ்வப்போது பவுண்டரிகளுக்கு விளாசவும் இருவரும் தயங்கவி்ல்லை.

ஆன்டர்ஸன் பந்துவீச்சில் ராகுல் அடித்த பந்தை ரூட் கேட்ச் பிடிக்க முற்பட்டு அதை தவறவிட்டார். ஆனால், 2-வதுமுறை கிடைத்த வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் தவறவிடவில்லை. ஆன்டர்ஸன் அவுட் ஸிவிங்காக வீசிய பந்து ராகுலின் பேட் நுனியில் பட்டு விக்கெட் கீப்பர் பட்லரிடம் தஞ்சமடைந்தது. ராகுல் 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா, ராகுல் கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். அணிக்குகூடுதலாக ஆல்ரவுண்டர் தேவை என்று எடுக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் வந்தவேகத்தில் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து டக்அவுட்டில் வெளியேறினார்.

ரவிந்திர ஜடேஜா 56 ரன்களில் ராபின்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கடைசிவரிசை வீரர்கள் விரைவாக வீழ்ந்துவிடுவார்கள் என்று எண்ணப்பட்டது. ஆனால், ஷமி 13 ரன்னில் ஆட்டமிழந்தநிலையில் 9-வது விக்கெட்டுக்கு பும்ரா, சிராஜ் கூட்டணி 33 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு படம் காட்டிய பும்ரா, சிக்ஸர் பவுண்டரிகளை அடித்து பட்டையக் களப்பினார், இறுதியாக பும்ரா 28 ரன்னில் ராபின்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிராஜ் 7 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி 84.5 ஓவர்களில் 278 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து தரப்பில் ராபின்ஸன் 5 விக்கெட்டுகளையும், ஆன்டர்ஸன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதில் ராபின்ஸன் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x