

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை மகளிருக்கான பளுதூக்குதலில் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்திருந்தார் மணிப்பூர் மாநிலத்தைதச் சேர்ந்த மீராபாய் சானு. பதக்கம் வென்ற அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.எனினும் இந்த இடத்தை அவர்அவ்வளவு எளிதாக அடைந்துவிடவில்லை. மணிப்பூரின் தலைநகரான இம்பால் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நோங்போங் கக்சிங் கிராமத்தில் வசித்து வருகிறார் மீராபாய் சானு.
இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இம்பாலில் உள்ள பயிற்சி மையத்துக்கு தினமும் பயணிப்பதற்கு போதுமான நிதி ஆதாரம் இல்லாததால் இம்பால் நகருக்கு ஆற்று மணலை கொண்டு செல்லும் லாரிகளில் லிப்ட் கேட்டு தினமும் பயணம் செய்துள்ளார் மீராபாய் சானு. பல வருடங்களாக தினமும் லாரி ஒட்டுநர்கள் மீராய் சானுவுக்கு உதவி செய்துள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, லாரி ஒட்டுநர்களின் உதவியை நினைகூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
லாரி ஒட்டுநர்கள், அவர்களின் உதவியாளர்கள் என 150 பேரை வீட்டுக்கு நேரில் அழைத்து அவர்களுக்கு சட்டை, துண்டு வழங்கினார். மேலும் அனைவருக்கும் மதிய விருந்து வழங்கியும் சிறப் பாக உபசரித்தார். அப்போது லாரி ஒட்டுநர்களின் மத்தியில் மீராபாய் சானு உருக்கமாக பேசினார். மீராபாய் சானு பேசும் போது, “உங்களது உதவி இல்லாமல் என்னால் பயிற்சிக்கு சென்றிருக்க முடியாது. உங்களால்தான் என்னால் பளுதூக்கும் வீராங்கனை யாக வளரமுடிந்தது. தற்போது நாட்டுக்கும் பெருமை சேர்க்க முடிந்தது” என்றார்.
இதைத் தொடர்ந்து மீராபாய் சானு தான் சந்தித்த கஷ்டங்கள் மற்றும் தனது பயணத்தில் செய்த தியாகங்கள் பற்றியும் பேசினார். அவர் கூறும்போது, “நான் இந்த நிலையை எட்டுவதற்கு பல தியாகங்களை செய்துள்ளேன். ஒரு பெரிய வீரராக அல்லது பெரிய ஒன்றை அடைய, நீங்கள் தியாகம் செய்ய வேண்டும், நான் பல தியாகங்களைச் செய்திருக்கிறேன்,
போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு நான் எதையும் சாப்பிடவில்லை, ஏனென்றால் என் எடை பற்றி நான்கவலைப்பட்டேன். எடையை பராமரிப்பது கடினம். எடையை பராமரிக்க நம் உணவை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.