

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிக் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆடவர்களுக்கான இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோ விக்கும், இரண்டாம் நிலை வீரரான ஆன்டி முர்ரேவும் மோதினர். இப்போட்டியின் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் ஜோகோவிக் எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் சற்று போராடிய ஆன்டி முர்ரே, ஜோகோவிக்குக்கு சற்று நெருக்கடியைக் கொடுத்தார். இருப்பினும் முர்ரேவின் சவாலை முறியடித்த ஜோகோவிக், 7-5 என்ற செட் கணக்கில் 2-வது செட்டை கைப்பற்றினார்.
மூன்றாவது செட்டில் இரு வீரர்களும் 6-6 என்று சமநிலை பெற்றதால் டை பிரேக்கர் வழங்கப்பட்டது. டை பிரேக்கரை 7-3 என்ற கணக்கில் வென்ற ஜோகோவிக், 6-1,7-5, 7-6 என்ற நேர் செட்களில் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிக் பட்டம் வெல்வது இது 6-வது முறையாகும். அவர் இதுவரை 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதே போல் ஆன்டி முர்ரே இறுதிப் போட்டிவரை முன்னேறி தோல்வியை சந்திப்பது இது 5-வது முறையாகும்.