நாங்கள் கடினமாக முயற்சி செய்தோம்: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால்
நாங்கள் கடினமாக முயற்சி செய்தோம். எனினும் எங்களால் அதனை வெற்றிப் பதக்கமாக மாற்ற முடியவில்லை என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி 3-4 என்ற கணக்கில் பிரிட்டன் அணியிடம் போராடி, தோல்வியைத் தழுவியது. தோல்வி அடைந்தாலும் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ஆதரவளித்த அனைவருக்கு அணியின் கேப்டன் ராணி ராம்பால் நன்றி தெரிவித்துள்ளார்,
இதுகுறித்து ராணி ராம்பால் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் கடினமாக முயற்சி செய்தோம். எனினும் எங்களால் அதனை வெற்றிப் பதக்கமாக மாற்ற முடியவில்லை. நாங்கள் வெற்றிக்கு அருகே சென்று தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. நாம் வலிமையாக மீண்டு வந்து, நமது நாட்டின் இதயங்களை வெல்வோம். எங்களது பயணத்தில் இறுதிவரை இருந்த உங்கள் பிரார்த்தனைகளுக்கும், ஆதரவுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் நாம் ஒரு பதக்கத்தை இழந்தோம். ஆனால், நமது ஹாக்கி அணி புதிய இந்தியாவின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளோம்.
மிக முக்கியமாக, டோக்கியோ 2020இல் அவர்கள் பெற்ற வெற்றி இந்தியாவின் இளம் மகள்களுக்கு ஹாக்கியை எடுத்துச் செல்லவும், அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கும். இது இந்திய அணிக்குப் பெருமையே” என்று தெரிவித்துள்ளார்.
