

பிரதமர் மோடியுடனான உரையாடலின் போது இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் கடுமையாக போராடித் தோல்வி அடைந்தது. இதனால், மகளிர் ஹாக்கி அணியின் பதக்கக் கனவு தகர்ந்தது.
இது குறித்து பிரதமர் "ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் நாம் ஒரு பதக்கத்தை இழந்தோம். ஆனால் நமது ஹாக்கி அணி புதிய இந்தியாவின் மனநிலையை பிரதிபலிக்கிறது" என்று பாராட்டிப் பேசியிருந்தார்.
இந்நிலையில், மகளிர் ஹாக்கி அணியினிரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில், வீராங்கனைகள் போராடி தோல்வியுற்றதை நினைத்து உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட அவர்களைப் பிரதமர் தேற்றுகிறார். அந்தக் காட்சிகள் அனைவரையும் நெகிழச் செய்வதாக உள்ளது.
பிரதமர் பேசுகையில், "நீங்கள் அனைவரும் அருமையாக விளையாடினீர்கள். உங்களின் நான்கைந்து ஆண்டு கால கடின உழைப்பு பதக்கமாக மாறாவிட்டாலும் கூட உங்களின் வியர்வை இந்தியாவின் கோடிக்கணக்கான மகள்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. அதனால், நீங்கள் ஏமாற்றமடையாதீர்கள்" என்று கூறினார்.
அப்போது சில வீராங்கனைகள் அழுதனர், அதற்கு பிரதமர் மோடி, "தயவுசெய்து நீங்கள் கண்ணீர் சிந்தாதீர்கள். ஒட்டுமொத்த தேசமும் உங்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறது. இதில் ஏமாற்றமடைவதற்கு ஒன்றுமில்லை. இந்திய ஹாக்கி மறுமலர்ச்சி கண்டுள்ளது. அது உங்களால் தான் சாத்தியமாகியுள்ளது" என்று கூறினார்.
பிரதமர் தனது உரையாடலின் போது வீராங்கனைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு நலம் விசாரித்தார். நவ்நீத் கவுரிடம், அர்ஜென்டினாவுடனான போட்டியின்போது ஏற்பட்ட காயம் சரியாகிவிட்டதா என்று விசாரித்துக் கொண்டார்.
வந்தனா கட்டாரியா, சலீமா டெடெ ஆகியோரையும் பிரதமர் பாராட்டினார். பின்னர், அணியின் கேப்டன் ராணி ராம்பால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். பயிற்சியாளர்கள் ஜோர்ட் மாரிஜ்னேவிடம் பேசி அணிக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்தமைக்கு பாராட்டுகள் தெரிவித்தார். பயிற்சியாளரும் பிரதமரின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி என்று கூறினார்.