

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார். சுஷில் குமாருக்குப் பிறகு மல்யுத்த விளையாடில் இரண்டாவது வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையையும் ரவி தாஹியா பெற்றுள்ளார்.
மல்யுத்தப் போட்டி ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, ரஷ்ய வீரர் ஜாவுர் உகுவேவை எதிர்கொண்டார்.
இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிக்குமார் தாஹியா ரஷ்ய வீரரிடம் தோற்றார்.
முதல் சுற்று ஆரம்பத்தில் 2 2 என்ற புள்ளிக்கணகில் சமநிலையில் இரு வீரர்களும் இருந்தனர். அப்போது இந்திய வீரர் சற்றே சறுக்கலை சந்திக்க ரஷ்ய வீரர் புள்ளிகளைக் குவித்தார். இறுதியில் ரஷ்ய வீரர் 7க்கு 2 என்ற கணக்கில் வாகை சூடினார்.
இதனால், ரவிக்குமார் வெள்ளிப் பதக்கமே பெற முடிந்தது. இந்தியாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் கிடைத்துள்ள இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஐந்து பதக்கங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக, இன்று காலை மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் ரெபிசாஜ் ரவுண்டில் பங்கேற்றார். அவர் ரஷ்யாவின் வெலேரியாவிடம் 1-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்திற்கு போட்டியிடம் வாய்ப்பை இழந்தார்.
பிரதமர் பாராட்டு:
வெள்ளி வென்ற வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரவிக்குமார் தாஹியா ஒரு குறிப்பிடத்தகுந்த மல்யுத்த வீரர். விளையாட்டில் அவருடைய போராட்ட குணமும் உறுதித் தன்மையும் தனிச்சிறப்பானது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற அவருக்குப் பாராட்டுகள். அவரது சாதனையில் இந்தியா பெருமிதம் கொள்கிறது" என ட்வீட் செய்துள்ளார்.