

ஜெர்மனி அணிக்கு எதிராக, அரணாக நின்று இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டோக்கியோவில் இன்று (வியாழக்கிழமை) நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இதன் மூலம் ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஆடவர் ஹாக்கி அணி முதல் முறையாகப் பதக்கம் வென்றுள்ளது. இந்திய அணி தரப்பில் சிம்ரன்ஜித் சிங் 2 கோல்கள் அடித்தார், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபேந்திர பால்சிங் தலா ஒரு கோல் அடித்தனர்.
முன்னதாக, ஒலிம்பிக்கில் இந்திய அணி 8 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை வென்றுள்ளது. கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது. அதன்பின் தற்போது வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெர்மனி அணிக்கு எதிராக அரண் போல் நின்று அந்த அணியில் கோல் முயற்சியைத் தடுத்த இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் புகைப்படம் வைரலாகியுள்ளது.
அப்புகைப்படத்தில் ஸ்ரீஜேஷ் கோல் கம்பத்தின் மேல் ஏறி அமர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ் தனது வெற்றி குறித்து ட்விட்டர் பக்கத்தில், “இப்போது என்னைச் சிரிக்க விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.