

வரலாற்று நாள். ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் இந்த நாள் இருக்கும் என்று இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஆடவர் ஹாக்கி அணி முதல் முறையாகப் பதக்கம் வென்றுள்ளது.
டோக்கியோவில் இன்று நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
ஒலிம்பிக் ஹாக்கியில் ஒரு காலத்தில் சிங்கமாக வலம் வந்த இந்திய அணி 8 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை வென்றுள்ளது. கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது. அதன்பின் 41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுவரும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியால் ஒரு பதக்கத்தைக் கூட வெல்ல முடியவில்லை.
ஆனால், தற்போது 41 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக வெண்கலத்தை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிம்ரன்ஜித்சிங் 2 கோல்கள் அடித்தார், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபேந்திர பால்சிங் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “வரலாறு! இந்த நாள் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும். தாய்நாட்டுக்காக வெண்கலத்தை வென்று நாடு திரும்பும் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் பாராட்டுகள்.
இந்தத் தடத்தின் மூலம் ஒட்டுமொத்த தேசத்தின் குறிப்பாக இளைஞர்களின் கற்பனையை இந்திய ஹாக்கி அணியினர் கைப்பற்றிவிட்டனர் .நம்முடைய ஆடவர் ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இது மிகப்பெரிய தருணம். உங்கள் சாதனையை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. உங்களுக்கான வெற்றி” எனப் பாராட்டியுள்ளார்.