Last Updated : 15 Feb, 2016 06:55 PM

 

Published : 15 Feb 2016 06:55 PM
Last Updated : 15 Feb 2016 06:55 PM

சிஎஸ்கே-வை எப்படி மறக்க முடியும்? - தோனி உணர்ச்சிகரம்

எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் பேசும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய கேள்வி எழுப்பப்பட்டவுடன் சற்றே உணர்ச்சிவயப்பட்டார்.

புதுடெல்லியில் புதிதாக தலைமை தாங்கவுள்ள ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஐபிஎல் சீருடை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி கேட்டவுடன் சற்றே உணர்ச்சிவசப்பட்டார்.

“நான் (சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து) நகர்ந்து சென்று விட்டேன் என்று நான் கூறினால் அது பொய்யாகவே இருக்கும். ஒரு மனிதனாக எனக்கு சென்னை காலக்கட்டம் ஒரு சிறப்பான பகுதியாகும். 8 ஆண்டுகளாக ஆடிய அணியுடன் உணர்ச்சிமயமான தொடர்வு இருக்கவே செய்யும் இருக்க வேண்டும்.

அரசியல் ரீதியாக சரியாக நான் கூற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நான் அப்படிப்பட்டவனில்லை. 8 ஆண்டுகள் அந்த அணியுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடிவிட்டு மற்றொரு அணிக்கு ஆடுவது நிச்சயம் வித்தியாசமானதுதான். எனவே உடனடியாக புதிய அணிக்கு விளையாடுவது எனக்கு பெரும் உற்சாகமூட்டுகிறது என்று நான் கூறினால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதும், எங்கள் மீது அன்பையும், பாசத்தையும் காட்டிய ரசிகர்கள் மீதும் உரிய முறையில் மதிப்பளிக்காது விட்டால், அது தவறு.

ஆனால் ஒரு தொழில்பூர்வ வீரராக, என்னை சேர்த்துக் கொண்ட புனே அணிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கேப்டனாக கூடுதல் பொறுப்பும் உள்ளது. ஆனால் ஒரு தொழில்நேர்த்தியான வீரர் என்ற முறையில் 100%-க்கும் மேல் நாம் பங்களிப்பு செய்ய வேண்டும்.

நிறைய வீரர்களை இழந்துள்ளேன். நாங்கள் 8 ஆண்டுகள் ஒன்றாக விளையாடினோம். எங்கள் மையக்குழு ஒருபடித்தானதாகவே இருந்தது. நாங்கள் ஒரு அணியாக ஆடினோம், சீராக ஆடினோம். ஆனால் ஏலத்தில் சில முன்னாள் சி.எஸ்.கே. வீரர்களையும் எடுத்துள்ளோம். 2 புதிய உரிமையாளர்கள் நிறைய வீர்ர்களை வாங்க வேண்டியிருந்தது. மற்ற 6 அணி உரிமையாளர்களும் ஒருவிதத்தில் செட்டில் ஆகிவிட்டனர். எனவே புதிய உரிமையாளர்கள் மீது அழுத்தம் இருந்தது” என்றார்.

ரெய்னா குஜராத் லயன்ஸுக்கு ஆடுவது பற்றி...

ரெய்னா எவ்வளவு அபாயகரமான வீரர் என்பதை நாம் அறிவோம். ஆனால் ஏதோ நானும் அவரும் எதிர்த்து ஆடுகிறோம் என்ற விஷயமல்ல இது. அவர் மற்ற அணிகளுக்கு எதிராகவும்தான் ஆட வேண்டியுள்ளது, சிறப்பாக ஆட அவர் முயற்சி செய்வார் என்றே எதிர்பார்க்கிறேன். எங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஆட்டத்தை நாங்கள் ஆடியாக வேண்டும்.

ஒவ்வொரு வீரருக்கும் அணியில் பங்கு உள்ளது. கெவின் பீட்டர்சன் ஒரு அருமையான ஆட்டக்காரர். அவர் ஆக்ரோஷமாக ஆடுபவர் களத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புபவர். கெவின் பீட்டர்சன் எப்படி இருக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஸ்டீபன் பிளெமிங் இணைந்தது மகிழ்ச்சி...

பிளெமிங் இருந்தால் அனைத்தும் கொஞ்சம் சுலபமாகிவிடும். நாங்கள் இருவரும் நீண்ட காலமாக சேர்ந்த் பணியாற்றி வருகிறோம். அவர் ஒரு அருமையான பயிற்சியாளர். அவரது நிர்வாகத்திறமைகள் அபாரம். அவரிடம் எனக்குப் பிடித்தது என்னைப்போலவே அவரும் அமைதியானவர்.

ரஹானே பற்றி...

ரஹானே மிகவும் சீரான முறையில் ஆடி வருகிறார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 11 வீர்ர்கள் குழுவில் எப்போதும் இடம்பெறுவதில்லை. காரணம் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் நன்றாக ஆடி வருகின்றனர். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் டாப் 2 அல்லது 3 வீரர்களில் ஒருவர்.

இவ்வாறு கூறினார் தோனி.

ரைசிங் புனே ஜெயண்ட் அணியின் துணைப்பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ரிஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x