Last Updated : 03 Aug, 2021 05:41 PM

 

Published : 03 Aug 2021 05:41 PM
Last Updated : 03 Aug 2021 05:41 PM

இந்தியக் குழி பிட்ச்சுகளுக்கு பதிலடி க்ரீன்டாப்தான்: பழி தீர்க்கும் மனநிலையில் ஆன்டர்ஸன்

இந்தியாவில் இந்திய அணி அவர்களுக்குச் சாதகமான பிட்ச்சுகளை அமைத்தது. நாங்கள் எங்களுக்குச் சாதகமான க்ரீன்டாப் பிட்ச்சுகளை அமைக்கிறோம். இந்திய வீரர்கள் எந்தப் புகாரும் செய்யமாட்டார்கள் என நம்புகிறேன் என்று இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் பேசியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை சவுத்தாம்டனில் தொடங்குகிறது. இந்த முறை முதல் டெஸ்ட் போட்டிக்கே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இங்கிலாந்து வாரியம் அமைத்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் பிசிசிஐ வாரியம் ஆடுகளம் குறித்து வெளியிட்ட புகைப்படத்தில் அதிகமான புற்கள் காணப்பட்டன.

இதுபோன்ற பிட்ச்சுகள் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் ஆன்டர்ஸன், பிராட், ராபின்ஸன் போன்றோருக்கு அல்வா சாப்பிட்டதுபோலத்தான். வேகத்தோடு சேர்த்து ரிவர்ஸிங், ஸ்விங் செய்யும் இந்தப் பந்துவீச்சாளர்கள் நிச்சயம் இந்த ஆடுகளத்தில் பெரும் சவாலாக இருப்பார்கள்.

இந்த ஆடுகளம் குறித்து இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் ஆடுகளத்தில் புற்கள் இருந்தாலும், அதுகுறித்து இந்திய வீரர்கள் யாரும் புகார் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் இந்தியாவுக்கு ஜனவரி மாதம் பயணம் செய்தபோது, அங்கு அமைக்கப்பட்ட குழி பிட்ச்சுகள் மூலம் எங்களை எளிதாக வீழ்த்தினார்கள். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சில் நாங்கள் தோல்வி அடைந்தோம்.

இந்திய அணி உள்நாட்டில் தங்களுக்குச் சாதகமான அம்சங்களுடன் ஆடுகளத்தை அமைத்துக் கொண்டது. இந்திய அணி மட்டுமல்ல உலக அளவில் இதுதான் நடக்கிறது. ஆதலால், இங்கிலாந்து ஆடுகளத்தில் சிறிது புற்கள் காணப்பட்டால் இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் புகார் செய்யமாட்டார்கள். அவர்களிடமும் வலிமையான பேட்டிங் வரிசை இருக்கிறது.

நல்ல ஆடுகளங்கள் அமைப்பார்கள் என நம்புகிறேன். வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக அமைக்கப்படும் ஆடுகளம் நிச்சயம் சுயநலத்தோடுதான் உருவாக்கப்படுகிறது. நிச்சயம் இதுபோன்ற ஆடுகளத்தில் பந்து நல்ல வேகமாகச் செல்லும், ஸ்விங் ஆகும் என எங்களுக்குத் தெரியும்.

ஆடுகளம் குறித்த புகைப்படம் 3 நாட்களுக்கு முன்பு வெளியானது. அதேபோன்ற ஆடுகளம்தான் போட்டிக்கு இருக்கும் என எனக்குத் தெரியாது. இடைப்பட்ட நாட்களில் புற்களை வெட்டியிருக்கலாம்.

இந்தியாவில் அணியில் உள்ள ஐபிஎல் டி20 போட்டியில் ஆடிப் பழக்கப்பட்ட வீரர்களுக்குப் பந்துவீசுவது எனக்குப் புதிய அனுபவம்தான். ஐபிஎல் தலைமுறை பேட்ஸ்மேன்களிடம் பயம் இருக்காது, மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பார்கள், அச்சமின்றி எந்தப் பந்தையும் எதிர்கொள்வார்கள். எந்த ஷாட்டையும் அடிக்கத் தயங்கமாட்டார்கள்.

இதற்கு உதாரணம் ரிஷப் பந்த். கடந்த இந்தியப் பயணத்தில் என்னுடைய பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். கங்குலி பேட் செய்துகூட இதுபோன்று நான் பார்த்தது இல்லை. நிச்சயமாக எனக்குப் புதுவிதமான அனுபவமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. இதுபோன்ற பேட்ஸ்மேன்கள் வருவது பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக இருக்கும். ரிஷப் பந்த்தின் பேட்டிங் இங்கிலாந்து பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும்.

இந்திய அணியில் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ஒவ்வொரு திறமை கொண்டவர்கள். ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் ஒவ்வொருவிதமான திட்டத்துடன் அணுக வேண்டும்''.

இவ்வாறு ஆன்டர்ஸன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x