

வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் ஒரு பகுதி என்று ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணியை பிரதமர் மோடி ஊக்கப்படுத்தியுள்ளார்.
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 2-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்தது.
41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பதக்கம் இல்லாமல் சென்றுவரும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளியை கைப்பற்றும் என எதிர்பாரக்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இருப்பினும் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டால் வெண்கலப் பதக்கத்தை வெல்ல முடியும்.
இன்று நடக்கும் ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியுடன் இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதும்.
இந்திய அணி சார்பில் 7-வது நிமிடத்தில் ஹர்மன்பிரித் சிங், மன்தீப் சிங்கும் கோல் அடித்தனர். பெல்ஜியம் சார்பில் லூயிக் லூபெர்ட், அலெக்சான்டர் ஹென்ட்ரிக்ஸ் 3(53,49 19 நிமிடம்) கோல்கள், டோமென் 60-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் வீரர்களை உற்சாகப்படுத்துவும், ஊக்கப்படுத்தவும் பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “ வெற்றிகளும், தோல்விகளும் வாழ்க்கையின் ஒரு பகுதி. நமது ஆடவர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார்கள். அடுத்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பாகச் செயல்படவும், எதிர்காலம் சிறப்படையவும் வாழ்த்துகள். நமது வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.