

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கடந்த 41 ஆண்டுகளாக எந்தவிதமான பதக்கமும் இல்லாமல் விளையாடிவரும் இந்திய ஹாக்கி அணிக்கு இந்த முறை பதக்கம் வென்று வறட்சிக்கு முடிவு கட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாளை நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் பெல்ஜியத்துடன் மோதுகிறது இந்திய ஹாக்கி அணி. இதில் வென்றுவிட்டால் இந்திய அணிக்கு வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் உறுதியாகிவிடும், 41 ஆண்டுகாலப் பதக்க வேட்கை தணியும்.
ஒலிம்பிக் ஹாக்கியில் ஒருகாலத்தில் சிங்கமாக வலம் வந்த இந்திய அணி 8 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை வென்றுள்ளது. கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது.
அதேபோல, கடந்த 1972-ம் ஆண்டு முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் பரமவைரி பாகிஸ்தானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
அதன்பின் 49 ஆண்டுகளுக்குப் பின் இந்த முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. கடந்த 1980-ம் ஆண்டு இந்திய அணி தங்கம் வென்றாலும், அப்போது ரவுண்ட் ராபின் முறையில் தொடர் நடத்தப்பட்டதால் அரையிறுதி நடக்கவில்லை.
இந்த ஒலிம்பிக்கில் ஏ பிரிவில் இடம் பெற்ற மன்பிரித் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் அணி, லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் மட்டும்தான் 1-7 என்ற கோல் கணக்கில் மோசமாகத் தோற்றது அதன்பின் அனைத்திலும் வென்று காலிறுதியில் பிரிட்டன் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நாளை நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன், ஐரோப்பியன் சாம்பியன் பெல்ஜியம் அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி பார்த்தால், கடந்த 2019-ம் ஆண்டில் 3 முறை பெல்ஜியத்துடன் மோதியுள்ள இந்திய அணி, 3 போட்டிகளிலும் (2-0, 3-1, 5-1) என்ற கணக்கில் வென்றது.
சமீபத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பியப் பயணத்தின் போதும் பெல்ஜியம் அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி. கடந்த ரியோ ஒலிம்பிக்கில் பெல்ஜியத்துடன் மோதிய இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
அதநேரம், ஒலிம்பிக்கில் பி பிரிவில் இடம் பெற்ற பெல்ஜியம் லீக் ஆட்டத்தில் வென்று முதலிடம் பிடித்து வலுவாக இருக்கிறது. ஆதலால், பெல்ஜியம் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.
சமீபகாலத்தில் பெல்ஜியம் அணியை வீழ்த்திய அனுபவம், அந்த அணியின் பலம், பலவீனம் தெரிந்திருப்பதால், இந்திய அணி வீழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.