

சேலத்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான தேசிய கால்பந்து போட்டியில் ஹரியாணா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் அந்த அணி தமிழகத்தை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.
இந்திய பள்ளிகளின் விளை யாட்டுக் குழுமம் சார்பில் 61-வது தேசிய கால்பந்து போட்டிகள் சேலத்தில் உள்ள நீலாம்பாள் சுப்ரமணியம் பள்ளி மைதானத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இதில் தமிழகம் உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்றன.
இதில் நேற்று மாலை நடந்த இறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் ஹரியாணா அணிகள் மோதின. இப்போட்டியில் ஹரியாணா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தமிழக அணி இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிரா அணி 3-வது இடத்தையும், கேரள அணி 4-வது இடத்தையும் பெற்றன. தமிழக அணியில் விளையாடிய கன்னியாகுமரி செயின்ட் மேரிஸ் பள்ளி மாணவி சபிதா மோல் இப்போட்டித் தொடரில் அதிகபட்சமாக 16 கோல்களை அடித்து சாதனை படைத்தார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஹரியாணா அணிக்கு சேலம் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கோப்பையை வழங்கினார்.