Last Updated : 01 Aug, 2021 09:02 AM

 

Published : 01 Aug 2021 09:02 AM
Last Updated : 01 Aug 2021 09:02 AM

ஃபெடரரும் இல்லை, வாவ்ரின்காவும் கிடையாது: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஸ்விஸ் வீராங்கனை பென்சிக்: ஹிங்கிஸின் தாய் பயிற்சியாளர்!


ஒலிம்பிக்கில் ஸ்விட்சர்லாந்து வீரர்கள் ரோஜர் ஃபெடரும், வாவ்ரின்காவும் இல்லாத நிலையில், மகளிர் பிரிவி்ல் பெலின்டா பென்சி தனது தேசத்துக்கு தங்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்ஸிக் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவி்ல் இன்று நடந்தஇறுதிஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோன்ட்ரோசோவாவை 7-5, 2-6, 6-3 என்ற செட்களில் தோற்கடித்து தங்கத்தை வென்றார்.
இன்று நடக்கும் மகளிர் இரட்டையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்திலும் பெலின்டா பென்சிக், சகநாட்டு வீராங்கனை விக்டோரிஜா கோல்பிக்குடன் இணைந்து, செக் குடியரசின் ரெஜ்சிகோவா, கேத்தரினா சினைகோவா ஜோடியை எதிர்கொள்கிறார்.

ஏற்கெனவே ஒற்றையர் பிரிவில்தங்கம் வென்ற பெலின்டா பென்சி்க்கிற்கு, இரட்டையர் பிரிவில் தங்கம் அல்லது வெள்ளி கிடைக்க வாய்ப்புள்ளது.

ஸ்விட்சர்லாந்திலிருந்து இதற்கு முன் எத்தனையோ வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்கள். மார்டினா ஹிங்கிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தபோதுகூட ஒலிம்பி்க்கில் விளையாடி தங்கம் வென்றது இல்லை, ஆனால், தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள பெலின்டா பென்சிக் தங்கம் வென்றுள்ளது சிறப்புக்குரியது.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் பென்சிக்கின் சிறப்பான செயல்பாடு என்று 2019-ம் ஆண்டில் யு.எஸ்.ஓபன் போட்டியில் அரையிறுதிவரை முன்னேறியதுதான். அதன்பின் இப்போது ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார்.

மார்ட்டினா ஹி்ங்கிஸின் தாயார் மெலானி மோலிட்டர்தான், பெலின்டா பென்சிக் சிறுவயதில் இருந்தபோது டென்னிஸ் பயிற்சியாளராக இருந்து அவரை வளர்த்தெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1992-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து வீராங்கனை மார்க் ரோசெட் கடைசியாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் அதன்பின் ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்குப்பின் தங்கம் வென்றது ஸ்விட்சர்லாந்து.
கடந்த 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஜர் பெடரர், வாவ்ரின்கா ஜோடி இணைந்து தங்கம் வென்றனர்.2012ம் ஆண்டில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முரேயிடம் இறுதிப்போட்டியில் பெடரர் தோல்வியடைந்து ஒலிம்பிக்கில் வெள்ளியோடு சென்றார்.

ஒலி்ம்பிக்கில் தங்கம் வென்றது குறித்து பென்சிக் கூறுகையில் “ எனக்கு ஒரு தங்கம் உள்ளிட்ட இரு பதக்கம் ஒலிம்பிக்கில் கிடைக்கப்போகிறது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய முழுமையான சக்தியையும் வெளிப்படுத்தி விளையாடுவேன். எனக்கு முன்பு விளையாடிய எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏராளமான சாதனையை செய்துள்ளார்கள். அவர்களைவிட சிறப்பாக விளையாடிவி்ட்டேன் என நினைக்கவில்லை. இந்த தங்கப்பதக்கத்தை பெடரருக்கு அர்ப்பணிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x