Published : 11 Feb 2016 04:27 PM
Last Updated : 11 Feb 2016 04:27 PM

நியூஸி. கிரிக்கெட் நேரலையை மறந்த இந்திய டிவி சேனல்கள்!

நியூஸிலாந்தில் நடைபெறும் சர்வதேச இருதரப்பு ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் இந்தியத் தொலைக்காட்சியில் எதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதில்லை. ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

உலகக்கோப்பை ஒரு ஐசிசி நிகழ்வு, அதனால் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வதேச போட்டிகள் நேரடி ஒளிபரப்புக்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதே தற்போதைய நிலவரம்.

கடைசியாக நியூஸிலாந்துக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்ட போது டெஸ்ட், ஒருநாள் தொடர்கள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன, ஆனால் அதன் பிறகு சுமார் 2 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சியில் காண முடிவதில்லை.

அதுவும் நியூஸிலாந்து அணியில் மார்டின் கப்தில் ஒரு புதிய அதிரடி வீரராக உருவெடுத்துள்ளார், கேன் வில்லியம்சன் இன்று உலக அளவில் டாப் 5 பேட்ஸ்மென்களில் ஒருவர். அவரது ஆட்டத்தையும் நாம் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிவதில்லை.

தற்போது உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை நியூஸிலாந்து ஒருநாள் தொடரில் 2-1 என்று வீழ்த்தி மண்ணைக் கவ்வச் செய்தது, அதையும் நாம் பார்க்க முடியவில்லை. அடுத்து டெஸ்ட் போட்டிகள் தொடங்குகின்றன.

இதில் இந்திய ரசிகர்களுக்கு ஆர்வமூட்டும் விஷயம் ஒன்று உள்ளது. அதாவது ஆஸ்திரேலியா இந்த டெஸ்ட் தொடரை வென்றால் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 நிலையில் உள்ள இந்திய அணியை ஆஸ்திரேலியா பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும்.

எனவே இந்த டெஸ்ட் தொடர் இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும், ரசிகர்களுக்கும் சுவாரசியமானதாகவே இருக்கும், ஆனால் தொலைக்காட்சியில் நாம் பார்க்க வாய்ப்பில்லை.

நேரலை ஒளிபரப்பு செய்யாததற்கான காரணம்:

ஒருநாள் போட்டிகள் நியூஸிலாந்தில் பகலிரவு ஆட்டமாக இருந்தால் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும், அதே பகல் ஆட்டமாக இருந்தால் நள்ளிரவு 2.30 அல்லது 3 மணிக்குத் தொடங்கும். டெஸ்ட் போட்டிகள் அதிகாலை 3 மணிக்குத் தொடங்கும்.

இந்த நேரத்தில் டி.ஆர்.பி ரேட்டிங் படி பார்வையாளர்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு வருகை தர மாட்டார்கள் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் முடிவு கட்டிவிட்டன.

இந்தியாவில் தற்போது 20-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் சேனல்கள் உள்ளன. ஆனால் இதில் ஒன்று கூட நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வதேச தொடர்களை ஒளிபரப்புவதில் நாட்டம் காண்பிக்கவில்லை, காரணம் விளம்பர வருவாய் மட்டுமே.

ஆனால் இதிலும் ஒரு தர்க்கம் இடிக்கிறது. கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டிகள் நேரடியாக ஒளிபரப்ப ஒரு நிறுவனம் முன்வந்தது. மே.இ.தீவுகளில் டி20 போட்டிகள் என்றால் இங்கு நள்ளிரவில்தான் பார்க்க முடியும். ஆனால் நியூஸிலாந்தில் நடைபெறும் போட்டிகள் ஒளிபரப்பப் படவில்லை என்பதற்கு நள்ளிரவு நேரம், பார்வையாளர்கள் இன்மை என்று காரணம் காட்டப்படுகிறது.

அதாவது நடப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை வெறும் காட்டடியை ரசிக்கும் டி20 கிரிக்கெட் ரசிகர்கள் என்றே தொலைக்காட்சி நிறுவனங்கள் முடிவு கட்டிவிட்டன.

ஆனால், சச்சின் டெண்டுல்கர் நியூஸிலாந்தில்தான் முதன்முதலாக ஒருநாள் போட்டியில் தொடக்கத்தில் களமிறங்கினார். அந்தப் போட்டியில் 49 பந்துகளில் 82 ரன்களை விளாசியதை எவ்வளவு பேர் நேரடியாக பார்த்திருப்பார்கள்! அந்த இன்னிங்ஸை பார்க்க நண்பர்கள் வீட்டுக்கு அலைந்ததாக சேவாக் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். 1992 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில்தான் நடைபெற்றது. அனைவரும் அதிகாலை 2.30 மணிக்கு தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்காரவில்லையா என்ன?

இந்திய கிரிக்கெட் மட்டுமல்ல, நியூஸிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளைக் காண இந்திய ரசிகர்கள் விரும்புவதற்கு மற்றொரு காரணம், இயற்கை எழில் மிகுந்த அந்த மைதானங்கள், மற்றும் அதிகாலையில் கிரிக்கெட் போட்டி ஒன்றை லைவ் ஆக பார்க்கும் பரவசத்தை இந்திய ரசிகர்கள் விரும்பியே வந்துள்ளனர்

முன்பெல்லாம், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு வருவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் மே.இ.தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டால், நள்ளிரவு வரை ஆல் இந்திய ரேடியோவில் நேரடி வர்ணனை ஒலிபரப்பாகும். பிறகு ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டு, மீதி பகுதிகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு மறுநாள் காலை ஒலிபரப்பாகும். அந்த அதிகாலை ஒலிபரப்புக்காக ரசிகர்கள் பறந்த காலம் உண்டு.

எனவே இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஒற்றைப் பரிமாணத்தில் வெறும் பொழுதுபோக்கு, அதிரடி மதிப்புகள் கொண்ட டி20 கிரிக்கெட்டை மட்டும் காண விரும்பும் ரசிகர்கள் என்று முத்திரை குத்த முடியாது. சேனல்களுக்கு டி20 கிரிக்கெட் ஒளிபரப்பு லாபம் தருவதாக உள்ளது அதனால் அதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

மற்றபடி எங்கு, எந்த நேரத்தில் சவாலான கிரிக்கெட் நடைபெற்றாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதனை நேரலை ஒளிபரப்பில் காணவே பெரிதும் விரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து தொடரை காண முடியாது போயிருப்பது ஒரு இழப்புதான். பணம்தான் விளையாட்டு ஒளிபரப்புகளை செலுத்தும் உந்துதலாக மாறி விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x