

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தத் தொடருக்கும் இல்லாத வகையில் அதிகமான பார்வையாளர்கள், ரசிகர்கள் சவுத்தாம்டனில் கடந்த மாதம் நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தைப் பார்த்துள்ளனர் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
ஒட்டமொத்தமாக இந்தியா, நியூஸிலாந்து இடையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை உலக அளவில் 89 பகுதிகளில் இருந்து 17.7 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். அதில் 13.06 கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பகுதி ரசிகர்கள் இந்தியாவிலிருந்துதான் பார்த்துள்ளனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்ஷன் சேனல்கள் மூலம் 94.6 சதவீதம் பேர் போட்டியைக் கண்டு ரசித்துள்ளனர்.
மிகவும் சிறிய நாடான நியூஸிலாந்தில் கூட இந்தப் போட்டியையும், ரிசர்வ் நாள் ஆட்டத்தையும் 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த டெஸ்ட் போட்டி நடக்கும் போது நியூஸிலாந்துக்கு இரவு நேரம். தங்களின் தூக்கத்தைக் கூட பொருட்படுத்தாமல், அதிகாலை நேரத்தில் எழுந்து தங்கள் நாட்டு அணியின் ஆட்டத்தை மக்கள் ரசித்துள்ளனர்.
பிரிட்டனின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனல் இந்தப் போட்டியை ஒளிபரப்பு செய்தது. 2019-2021 வரையிலான ஆண்டுகளில் இங்கிலாந்து அணி பங்கேற்காத போட்டிகளில் அதிகமாகப் பார்க்கப்பட்ட ஆட்டம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம்தான். 2015-ம் ஆண்டிலிருந்து இதுவரை இங்கிலாந்த அணி பங்கேற்காத டெஸ்ட் போட்டிகளில் அதிகமாகப் பார்க்கப்பட்டது, ரிசர்வ் நாள் ஆட்டம்தான் என ஐசிசி தெரிவித்துள்ளது.
ஐசிசி இந்த முறை ஓடிடி தளத்திலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை ஒளிபரப்பியது. இதில் உலக அளவில் 145 இடங்களில் இருந்து 6,65,100 பார்வையாளர்கள், நேரலையில் பார்த்துள்ளனர்.
ஐசிசியின் ஃபேஸ்புக் மூலம் இந்தப் போட்டியை 42.3 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 36.8 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளன. அதிலும் ரிசர்வ் நாள் எனச் சொல்லப்பட்ட கடைசி நாள் ஆட்டத்தை ஃபேஸ்புக் மூலம் ஒரே நாளில் 6.57 கோடி பேர் பார்த்துள்ளனர். 24 மணி நேரத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட பக்கம் இதுவாகத்தான் இருக்கும்.
இதற்கு முன் 2020, மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை 6.43 கோடி பேர் பார்த்த நிலையில், அதைவிட ரிசர்வ் நாள் ஆட்டத்தைப் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் இறுதி ஆட்டத்தை 7 கோடி பேர் பார்த்துள்ளனர். இதுதவிர ஐசிசியின் மொபைல் செயலி, இணையதளம், ட்விட்டர், யூடியூப் ஆகியவை மூலமும் 51.50 கோடி வியூவ்ஸ் கிடைத்துள்ளது.