ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: தோற்றாலும் பரவாயில்லை; ஜாம்பவான் மா லாங்கிடம் ஒரு கேமை வென்ற சரத் கமல்

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் | படம் உதவி: ட்விட்டர்.
இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
2 min read

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் சீன வீரரும், ஜாம்பவான் மா லாங்கிடம் ஒரு கேமை வென்று போராடித் தோற்றார் இந்திய வீரர் சரத் கமல்.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையருக்கான டேபிள் டென்னிஸ் போட்டி 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் முதல் வீரரும், ஜாம்பவானுமாகிய சீன வீரர் மா லாங்கை எதிர்கொண்டார் இந்திய வீரர் சரத் கமல்.

ஜாம்பவான் மா லாங்கை வீழ்த்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இதுவரை மா லாங் தான் பங்கேற்ற ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டிகள் அனைத்திலும் சாம்பியன் பட்டம் வெல்லாமல் வந்தத இல்லை. உலக அளவில் டேபிள் டென்னிஸ் பிரிவில் முடிசூடா மன்னன் மா லாங் என்பதால் அவரை வீழ்த்துவது சரத் கமலுக்குக் கடினமானதுதான்.

ஆனால், மா லாங்கிடம் போட்டியிட்டு ஒரு கேமை வென்ற சரத் கமலின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது. மா லாங்கிடம் விளையாடி ஒரு கேமை அவரிடம் இருந்து பறிப்பது கடினமானது. அதை சரத் கமல் செய்துள்ளார்.

2-வது கேமில் சிறப்பாக ஆடிய சரத் கமல், ஸ்னாப் ஷாட் மூலம் அந்த கேமைத் தன்வசப்படுத்தி மாலாங்கிற்கு அதிர்ச்சி அளித்தார். 3-வது கேமிலும் 4-2 என்ற கணக்கில் சரத் கமல் முன்னிலையில் இருந்தார். ஆனால், மா லாங் அதன்பின் நெருக்கடி அளித்து 8-8 என்ற கணக்கில் நெருக்கடி கொடுத்து 12-11 என்ற கணக்கில் மா லாங் முடித்து 2-1 என்ற கேம் கணக்கில் முன்னிலை பெற்றார்.

46 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சரத் கமல் 7-11, 11-8, 11-13, 4-11, 4-11 என்ற கேம் கணக்கில் மா லாங் வீழ்த்தினார். கடைசி இரு செட்களில் சரத் கமல் ஆட்டத்தில் லேசான தொய்வு கிடைத்ததைப் பயன்படுத்திய மா லாங் தனது வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பி கமலைப் பணியச் செய்தார்.

இந்தப் போட்டிக்குப் பின் சீன வீரர் மா லாங் கூறுகையில், “எனக்கு சரத் கமலுடனான ஆட்டம் கடினமாக இருந்தது. ஒலிம்பிக்கில் ஒவ்வொரு ஆட்டமும் கடினமாகவே இருக்கும். எந்த எதிராளியையும் குறைத்து மதிப்பிட முடியாது. எந்த நாட்டையும் குறைத்து மதிப்பிட முடியாது.

எப்போதும் கடினமாகவே இருக்கும். இதுபோன்ற கடினமான சூழலுக்கு ஏற்பத்தான் நான் தயாராகி இருக்கிறேன். 3-வது ஆட்டம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆனால் கடைசி இரு கேம்களில் வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பினேன்” எனத் தெரிவித்தார்.

சரத் கமல் தோல்வியோடு டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி வெளியேறிவிட்டது. ஏற்கெனவே மனிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி, சத்யன் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் வெளியேறியிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in