

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் நாட்டுப்பற்று குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன.
மேலும் ஐபிஎல் அணியான கொல்கத்தாவின் பயிற்சியாளராகவும், கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனையாளராகவும் அவர் செயல்பட்டது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பாகிஸ்தானில் இவரது நாட்டுப்பற்று பற்றி சிலர் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ஜியோ நியூஸ் சானலில் இதைப்பற்றி வாசிம் அக்ரம் பேசுகையில், "இது போன்ற நாகரிகமற்ற கருத்துக்களை என் மீது விமர்சனமாக வைக்கும்போது எனக்கு ஆத்திரம் ஏற்படுவதுண்டு, அவர்கள் என் எதிரே இதையெல்லாம் எழுதினால் நான் இதை அவர்களைப்போலவே எதிர்கொள்வேன்.
பயிற்சியாளராக இருப்பது மற்றும் வர்ணனையாளராகப் பணியாற்றுவது என்பது எனது வாழ்வாதாரம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். என் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தில் நான் இவற்றையெல்லாம் செய்யாமல் என்ன பழம் விற்கவா செல்வது?
மன்னிக்க வேண்டும், நான் யாரிடமும் சென்று கெஞ்சுபவன் அல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடமே நான் கூறியிருக்கிறேன், எப்போது கராச்சியில் நான் இருக்கிறேனோ அப்போது இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன் என்று, ஆனால் இவையெல்லாம் என்னைக் கேட்டால்தானே செய்ய முடியும், அப்படியிருக்கும்போது நான் என் வாழ்வாதாரத்திற்காக என்ன செய்தால் இவர்களுக்கு என்ன?
எழுதுவதற்கு முன்னால் யோசிக்க வேண்டும், ஏனெனில் அனைவருக்கும் சுயமரியாதை உண்டு" என்று காட்டமாகக் கூறியுள்ளார் வாசிம் அக்ரம்.