

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் கலந்துகொள்ள சம்மதிக்காவிட்டால் வேறொரு புதிய அணி தேர்வு செய்யப்படும் என்று மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் மேற்கு இந்திய தீவு அணியின் வீரர்கள் திடீரென கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். உலகக்கோப்பைக்கான ஊதிய ஒப்பந்தத்தை ஏற்கமுடியாது, அதனால் எங்களுக்கு நிறைய பொருளாதார இழப்புகள் ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்துள்ளனர்.
டி20 உலக கோப்பையில் ஒவ்வொரு போட்டிக்கும் வீரர் களுக்கு ரூ.4.71 லட்சம் வழங்கு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வீரருக்கு மொத்தமாக ரூ.18.84 லட்சம் மட்டுமே கிடைக்கும். கடந்த 2012 உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது இது 50 முதல் 80 சதவீதி ஊதியம் குறைவு என்றும் வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஊதியத்தை இரு மடங்கு உயர்த்த வேண்டும். போட்டியில் கிடைக்கும் பரிசுத்தொகை முழுவதையும் வீரர்களுக்கே வழங்கவேண்டும். அதிலிருந்து 20 சதவீதம் பிடித்தம் செய்யக்கூடாது என்றும் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் டி 20 உலகக் கோப்பையில் முன்னணி வீரர்கள் அடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி கலந்துகொள்ளுமா என்பதில் சந்தேகம் நீடித்து வருகிறது.
மிரட்டல்
இந்நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி மைக்கே முயர்ஹெட் இந்த விவகாரம் தொடர்பாக கூறும்போது:
சம்பளம் குறித்த ஒப்பந்தத் துக்கு ஏற்கெனவே விளையாட்டு வீரர்கள் சங்கம் ஒப்புதல் அளித் துள்ளது. இந்தப் போட்டிக்காக அதை மாற்றமுடியாது. பிப்ரவரி 14-ம் தேதிக்குள் உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொள்ள வீரர்கள் சம்மதிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் போட்டியில் பங்குபெற மறுப்பு தெரிவித்ததாகக் கருதப்படும். அவர்களுடைய மறுப்புக்குப் பின்னால் ஏதோ ஒரு சதி உள்ளது.
ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதமே வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பல போட்டிகளில் விளையாடியுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்று முடிவு செய்யப்படும். மேலும் டி20 உலகக்கோப்பைக்கு புதிய அணி தேர்ந்தெடுக்கப்படும். இப்போதைக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.