

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில், மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவி்ல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் குரூப் ஜே ஆட்டம் இன்று நடந்தது. இதில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை எதிர்த்து இஸ்ரேலின் செனியா பொலிகர்போவா மோதினார்.
28 நிமிடங்கள், ஒருதரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இஸ்ரேலிய வீராங்கனை செனியாவை 21-7, 21-10 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி2-வது சுற்றுக்கு சிந்து முன்னேறினார்.
2-வது சுற்றில் தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள ஹாங்காங் வீராங்கனை செங் கன் யின்னை எதிர்கொள்கிறார் சிந்து.
சர்வதேச அளவில் பல்வேறு வீராங்கனைகளுக்கு நெருக்கடி கொடுத்து ஆடும் சிந்துவுக்கு, இஸ்ரேலிய வீராங்கனையின் ஆட்டம் சவாலாக இருக்கவில்லை. முதல் கேமில் 7 புள்ளிகளுக்கு மேல் விட்டுக் கொடுக்காத சிந்து,2-வது கேமிலும் ஆதிக்கம் செலுத்தி 10 புள்ளிகள்விட்டுக்கொடுத்து வெற்றி பெற்றார்.
சிந்து தனது ஆட்டத்தில் எந்தவிதமான தவறுகளையும் செய்யவி்ல்லை, இஸ்ரேலிய வீராங்கனை எந்தவிதமான ஆதிக்கமும் செலுத்தவிடாமல் சிந்து விளையாடி முதல் சுற்றில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் வெள்ளி வென்ற சிந்து, இந்த முறை தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் சீன தைப்பே வீரர்கள் லீ யாங், வாங் சி லின் ஜோடியை 21-16, 16-21, 27-25 என்ற செட்களில் வீழ்த்தி 2-வது சுற்று இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இஸ்ரேல் வீரர் மிஸா ஜிபர்மெனிடம் 21-17, 21-15 என்ற கணக்கில் இந்திய வீரர் சாய் பிரணித் தோல்வி அடைந்தார்.