Last Updated : 24 Jul, 2021 02:02 PM

 

Published : 24 Jul 2021 02:02 PM
Last Updated : 24 Jul 2021 02:02 PM

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: அப்போது மல்லேஸ்வரி; இப்போது மீராபாய்; 21 ஆண்டுகளுக்குப் பின் பளுதூக்குதலில் பதக்கம்: யார் இந்த மீராபாய் சானு?

பளுதூக்குதல் பிரிவில் 21 ஆண்டுகளுக்குப் பின், கர்னம் மல்லேஸ்வரிக்குப் பின் மகளிர் பிரிவில் மணிப்பூர் வீராங்கனை ஷாய்கோம் மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்

2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பிரிவில் கர்னம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றதுதான் கடைசி. அதன்பின் 21 ஆண்டுகள் இடைவெளியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

49 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்குதலில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ (87 கிலோ ஸ்நாட்ச், 115 கிலோ க்ளீன் ஜெர்க்) தூக்கி 4 விதமான முற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் பங்கேற்க இந்திய அளவில் தகுதி பெற்ற முதல் வீராங்கனையும் மீராபாய் சானுதான். அதுமட்டுமல்லாமல் பளுதூக்குதல் பிரிவில் மகளிர் பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனையும் சானு மட்டும்தான். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்த சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் நாடு திரும்புகிறார்.

சீனாவின் ஹிஹு ஹோ 210 கிலோ எடை தூக்கி தங்கம் வென்று ஒலிம்பிக்கில் வரலாறு படைத்துள்ளார், இந்தோனேசிய வீராங்கனை கேன்டிகா ஆயிஷா 194 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தியாவில் பளுதூக்குதல் பிரிவில் மகளிர் பிரிவில் கர்னம் மல்லேஸ்வரிக்குப் பின் ஒலிம்பிக்கில் மீரா சானு 2-வது வீராங்கனையாகப் பதக்கம் வென்றுள்ளார். தன்னுடைய முதல் முயற்சியில் மீராபாய் சானு 84 கிலோவையும், 2-வது முயற்சியில் 87 கிலோவையும் தூக்கினார். ஆனால், 3-வது முயற்சியில் 89 கிலோவைத் தூக்குவதில் மீராபாய் சானு தோல்வி அடைந்தார்.

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே இந்தியாவுக்கு முதல் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை மீராபாய் சானு வென்று கொடுத்துள்ளார்.

யார் இந்த மீராபாய் சானு?

மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே நான்பாக் காக்சிங்கில் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்தவர் மீராபாய் சானு. 12 வயதிலேயே சானு அதிக பளுவான விறகுக் கட்டைகளைச் சுமந்ததால், அப்போதே சானுவின் வலிமையைக் குடும்பத்தினர் அடையாளம் கண்டுகொண்டனர். அதன்பின் பளுதூக்கும் வீராங்கனையாகப் பயிற்சி பெற்று, மணிப்பூர் மாநிலத்திலிருந்து மீராபாய் சானு தேர்வானார்.

மீராபாய் சானுவுக்கு முதல் சர்வதேச அறிமுகம் 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடந்த காமென்வெல்த் போட்டியாகும். இந்தப் போட்டியில் தனது 18-வது வயதில் பங்கேற்ற மீராபாய் சானு, 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதன்பின் 2016-ம் ஆண்டு பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக மீராபாய் சானு தனது 20-வது வயதில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற சானுவால் 6-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இருந்தாலும் சானு சோர்வடையவில்லை, அடுத்த ஆண்டு அமெரிக்காவின் அனாஹிம் நகரில் பளு தூக்குதலுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் 48 எடைப் பிரிவில் பங்கேற்ற சானு, ஸ்நாட்ச், கிளீன் ஜெர்க் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றார்.

2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த காமென்வெல்த் போட்டியிலும் மீராபாய் சானு முத்திரை பதித்தார். 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற சானு, க்ளீன் ஜெர்க், ஸ்நாட்ச் ஆகிய பிரிவுகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

2019-ம் ஆண்டு சீனாவின் நிங்போ நகரில் நடந்த ஆசிய சாம்பியன் பளுதூக்குதலில் சானு பங்கேற்றார். 48 கிலோ எடைப் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய சானு, ஸ்நாட்ச், க்ளீன் ஜெர்க் பிரிவில் சாதித்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஆனால், அதே ஆண்டில் தாய்லாந்தில் பாட்டயா நகரில் நடந்த 49 கிலோ பிரிவுக்கான பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் பிரிவில் பங்கேற்ற சானுவால் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஸ்கென்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் சானு பங்கேற்றார். முன்னாள் ஆசிய சாம்பியனான சானுவால் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஆனால், கொல்கத்தாவில் கடந்த ஆண்டு நடந்த தேசிய சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் சானு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்

மீராபாய் சானுவின் சாதனையைப் பாராட்டி மத்திய அரசு விளையாட்டுப் பிரிவில் உயரிய கேல் ரத்னா விருதையும், பத்மஸ்ரீ விருதையும் 2018-ம் ஆண்டு வழங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x