

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், அபூர்வி சந்திலா ஏமாற்றத்தைச் சந்தித்தனர். இதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இருவரும் இழந்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று தொடங்கியது. ஒலிம்பிக் போட்டிக்கு முதன்முறையாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இளவேனில்வாலறிவன் தகுதி பெற்றுள்ளார்.
10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மகளிருக்கான சுற்றில் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். இதில் 10மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் 626.5 புள்ளிகள் பெற்று 16-வது இடத்தையே இளவேனிலால் பிடிக்க முடிந்தது. அனுபவம் வாய்ந்த அபூர்வி சந்திலா 621.9 புள்ளிகளுடன் 36-வது இடத்தைப் பிடித்தார்
இந்திய வீராங்கனைகள் இளவேனில், அபூர்வி அருமையான தொடக்கத்தை அளித்தனர். 21வயதான இளவேனில் 3-வது சீரிஸ் சுடுதலில் சிறப்பாகச் செயல்பட்டு 104.9 புள்ளிகளைப் பெற்றார் ஆனால், 5வது மற்றும் 6-வது சீரிஸில் இளவேனில் தொடர்ந்து புள்ளிகளைத் தக்கவைக்க முடியவில்லை.
அனுபவம் வாய்ந்த அபூர்வி சந்திலா முதல் சீரிஸில் 105 புள்ளிகளைப் பெற்று சிறப்பாகத் தொடங்கினார்,ஆனால், அடுத்தடுத்த சீரிஸில் புள்ளிகளத் தக்க வைக்க அபூர்வி தவறினார்.
632.9 புள்ளிகளுடன் நார்வே வீராங்கனை ஜெனட் ஹெக் டஸ்டாட் முதலிடத்தையும், தென் கொரிய வீராங்கனை ஹெமூன் பார்க் 2-வது இடத்தையும் பிடித்தனர்.