

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியி்ல் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் கலப்பு இரட்டையர் தீபிகா குமாரி, பிரவின் ஜாதவ் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
சீன தைப்பே ஜோடியை 2-வது சுற்றில் வீழ்த்தி, காலிறுதியை இந்திய ஜோடி உறுதி செய்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று தொடங்கியது. வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை தீபிகா குமாரியும், பிரவின் ஜாதவும் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்றனர். இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் சீன தைப்பே ஜோடி லின் சியா என், டாங் சி சுன் ஆகியோரை இந்தியாவின் தீபிகா குமார், பிரவின் ஜோடி எதிர்கொண்டனர்.
தொடக்கத்தில் 1-3 என்ற கணக்கில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவின் பின்தங்கினர். ஆனால், இறுதியில் சீன தைப்பே ஜோடியை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதியை தீபிகா குமாரி, பிரவின் ஜோடி உறுதி செய்தனர்.பிரவின், தீபிகா ஜோடி காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் 1,319 புள்ளிகள் பெற்றனர்.
காலிறுதி ஆட்டத்தில் வலிமையான தென் கொரிய ஜோடியை தீபிகா குமாரி, பிரவின் ஜோடி எதிர்கொள்கின்றனர்.
வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா குமாரியுடன் இடம் பிடிக்க தகுதிச்சுற்றில் அதிகமான புள்ளிகளைப் பெற வேண்டும். அந்த வகையில் இந்தியாவின் அதானு தாஸ், தருண்தீப் ராய் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி பிரவின் ஜாதவ் தகுதி பெற்றார். அதானு தாஸ் 35-வது இடத்தையும், பிரவின் 31-வது இடத்தையும் பிடித்தனர்.