

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதனை டெல்லியில் இருந்தபடியே தொலைகாட்சியில் பார்வையிட்ட பிரதமர் மோடி இந்திய அணியினர் வருகையை கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கிறது. டோக்கியோவில் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை கோலாகலமாக தொடங்கியது.
ஜப்பானில் கரோனா பரவல் அச்சம் காரணமாக தொடக்க நாள் நிகழ்ச்சியில் ஒலிம்பிக் தொடக்க விழாவில் 950 பார்வையாளர்கள் மட்டும் பங்கேற்றனர். முதலிலில் ஜப்பானின் தேசிய கீதம் படப்பட்டது. மேடைக்கு ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாக் வருகை தந்தார்.
விழாவின் முக்கிய அம்சமாக 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன்அணிவகுத்து சென்றனர். ஒலிம்பிக் தொடக்க விழா வீரர்கள் அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு சென்றது.
கரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான இந்திய வீரர்கள் பங்கேற்கவில்லை. குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தொடக்க விழாவில் இந்திய தரப்பில் 6 அதிகாரிகள், 19 வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொண்டனர்.
இந்திய அணியின் சார்பில் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோர் சென்றனர்.
இதனை டெல்லியில் இருந்தபடியே தொலைகாட்சியில் பார்வையிட்ட பிரதமர் மோடி இந்திய அணியினர் வருகையை கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழாவில் இந்திய வீரர்கள் பங்கேற்ற காட்சியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் டெல்லியில் இருந்தபடி டிவி வழியாக பார்த்தனர்.