Published : 22 Jul 2021 08:10 AM
Last Updated : 22 Jul 2021 08:10 AM

இந்திய டெஸ்ட் தொடர்: மீண்டும் ராபின்ஸன்; வலிமையான இங்கிலாந்து அணி அறிவிப்பு


நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒலே ராபின்ஸன், இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4-ம் தேதி சவுத்தாம்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான 17 வீரர்கள் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

அதில் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரின் போது சர்ச்சைக்குரிய ட்விட்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டஇங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ராபின்ஸன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டூவர்ட் பிராட், ேஜம்ஸ் ஆன்டர்ஸன், மார்க் உட், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஜாஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, சாம் கரன் ஆகியோர் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸுக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக சரியாகவில்லை என்பதால் இருவரும் சேர்க்கப்படவில்லை.

பேட்டிங்கில் ஹசீப் ஹமீது, ஒலே போப், டான் லாரன்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூஸிலாந்து தொடரில் இடம் பெற்ற ஜேம்ஸ் பிரேசேவுக்கு இடமில்லை.

சுழற்பந்துவீச்சுக்கு டாம் பெஸ், ஜேக் லீச் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். யார்க்ஸையர் அணியில் இடம் பெற்ற டாம் பெஸ் சமீபத்தில் நார்த்தன்ட்ஸ் அணிக்கு எதிராக 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதையடுத்து அணியில் இடம் பெற்றுள்ளார்.

சவுத்தாம்டன் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், இரு சுழற்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து அணி, இதுதவிர பகுதிநேர பந்துவீச்சுக்கு கேப்டன் ஜோ ரூட் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், மார்க் உட் என மூன்று வீரர்கள் உள்ளனர். இதில் மார்க் உட் ஆல்ரவுண்டராக சேர்க்க முடியாவிட்டாலும், இக்கட்டான நேரத்தில் பலமுறை இங்கிலாந்து அணிக்கு விக்கெட் விழாமல் பாதுகாத்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் ராபின்ஸன் மீண்டும் இடம் பெற்றிருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரிய பலம். வேகப்பந்துவீச்சில் பிராட், ஆன்டர்ஸன், ராபின்ஸன், மார்க் உட், சாம் கரன், ஸ்டோக்ஸ் என பெரிய படை இருக்கிறது. இதில் இங்கிலாந்து காலநிலைக்கு ஏற்ப பந்தை ஸ்விங் செய்வதில் ஆன்டர்ஸன், பிராட், ராபின்ஸன் மூவரும் தேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி விவரம்

ஜோ ரூட்(கேப்டன்), ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஜானி பேர்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜாக் கிராலே, சாம் கரன், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், ஜேக் லீச், ஒலே போப், ஒலே ராபின்ஸன், டாம் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், மார்க் உட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x