

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மும்பை-மத்திய பிரதேச அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையால் மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கட்டாக்கில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 371 ரன்னும், மத்திய பிரதேசம் 227 ரன்னும் எடுத்தது. 144 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 125.1 ஓவரில் 426 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சூர்யகுமார் யாதவ் 115, ஆதித்யா தாரே 109 ரன்கள் விளாசினார்.
571 ரன்கள் இலக்குடன் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை விளையாடிய மத்திய பிரதேச அணி 109 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. ஓஜா 113, ஹர்பிரித் சிங் 105 ரன் எடுத்தனர்.
24ம் தேதி இறுதிப்போட்டி
முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையால் மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அணி வரும் 24ம் தேதி புனேவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சவுராஸ்டிரா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.