

ஒலிம்பிக் போட்டியில் 1896-ல்வாள்வீச்சு அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில் இந்த விளையாட்டில் தற்போது முதன்முறையாக இந்தியாவில் இருந்து பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த சி.ஏ.பவானி தேவி. இந்த ஆண்டில் ஹங்கேரியில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கொரியா அணியிடம் கால் இறுதிச் சுற்றில் ஹங்கேரி தோல்வி அடைந்தது. இதன் அடிப்படையில் சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசை (ஏஓஆர்) அடிப்படையில் பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.
கோயில் பூசாரி ஆனந்த சுந்தரராமன், இல்லத்தரசி ரமணி ஆகியோருக்கு மகளாக பிறந்த சடலவாடா ஆனந்த சுந்தரராமன் பவானிதேவி, அனைவராலும் சிஏ பவானிதேவி என அறியப்படுகிறார். தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது 10 வயதில் பவானி தேவிக்கு, வாள்வீச்சு விளையாட்டு அறிமுகமாகி உள்ளது. பவானி தேவி வாள்வீச்சை விருப்பப்பட்டு தேர்வு செய்யவில்லை, அதில் அவர் சிக்கிக்கொண்டார். அவர் 6-ம் வகுப்பு படிக்கும்போது ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வாள்வீச்சு உள்ளிட்ட 6 விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. பவானி தேவியின் முறை வந்த போது மற்ற விளையாட்டுகளில் ஆறு இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. இதனால் வாள்வீச்சை தேர்வு செய்தார் பவானி தேவி.
தொடக்கத்தில் மரத்தினாலான குச்சியை வைத்தே பவானி தேவி பயிற்சி மேற்கொண்டார். எனினும் ஒரு வருடத்திற்குள், 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தேசிய போட்டியில் தங்கம் வென்றார். தொடர்ந்து திறனை மெருகேற்றுவதற்காக தனது 16 வயதில், வீட்டை விட்டு வெளியேறி, கேரளாவின் தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் இணைந்தார். அங்கு இந்தியாவின் மிகச்சிறந்த வாள்வீச்சு பயிற்சியாளர்களில் ஒருவரான சாகர் லாகுவின் கீழ் பயிற்சி பெற்றார்.
அன்று முதல் 27 வயதான தற்போது வரை அவருடைய வாள்வீச்சு பயணத்தில் ஜூனியர் முதல் தொழில்முறை பிரிவு வரையிலான காலக்கட்டத்தில் 9 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2009-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன் வெல்த் சாம்பியன்ஷிப் மற்றும் 2010-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச போட்டி ஆகியவற்றில் வெண்கலப் பதக்கம் வென்றார் பவானி தேவி.
தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன் ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 44 வருட கால வரலாற்றில் இந்தத் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதே ஆண்டில் சில சரிவுகளை சந்தித்த போதிலும் ஐஸ்லாந்தில் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கோப்பை சாட்டிலைட் தொடரில் பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார்.
பவானி தேவி தனது வாள்வீச்சு பயணத்தில் சந்தித்த தடைகள் ஏராளம். ஏனெனில் வாள்வீச்சு எந்த ஸ்பான்சர்களையும் ஈர்க்கவில்லை, எனவே பவானி தேவியின் பெற்றோர்பயிற்சியளிப்பதற்கும் போட்டியிடுவ தற்கும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் கடன் வாங்கினர். மேலும் பவானி தேவி பணம் திரட்டுவதற்காக கிரவுடு ஃபண்டிங் வலைத்தளங்களை கூட நாடினார். 2011 மற்றும் 2015-க்கு இடையில், இது மிகவும் கடினமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் மன அழுத்தத்திற்கு ஆளான பவானி தேவி, ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றுகூட நினைக்கத் தொடங்கினார்.
ஆனால் பெற்றோர் அளித்த ஊக்கத்தால் துன்ப காலங்களில் கூட பவானி தேவி வரலாறு படைத்துக் கொண்டிருந்தார். 2015 ம் ஆண்டில், 23 வயதுக்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் பிளெமிஷ் ஓபனில் வெண்கலம் வென்றார். இதைத் தொடர்ந்து அவருக்கான அங்கீகாரம் விரைவில் வந்து சேர்ந்தது. கோ ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை தனது வழிகாட்டல் திட்டத்திற்கு பவானி தேவியை தேர்ந்தெடுத்து ஊட்டச்சத்து, மனநிலை, காயம் மறுவாழ்வு மற்றும் பலவற்றுக்கான உதவிகளை வழங்கியது.
அடுத்த ஆண்டு தமிழக அரசு எலைட் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கு பவானி தேவியை தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி கிடைத்தது. தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒலிம்பிக் போடியம் திட்டத்தில் சேர்க்கப்பட்டார் பவானி தேவி.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் இத்தாலியின் லிவோர்னோ நகரில் பயிற்சியாளர் நிக்கோலா சனோட்டியின் கீழ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பவானி தேவி. இத்தாலியை பயிற்சி களமாக பவானி தேவி தேர்வு செய்ததற்கு முக்கிய காரணமும் உள்ளது. இத்தாலியில் வாள்வீச்சு விளையாட்டின் நிலை மிகவும் உயர்ந்தது மற்றும் உயர்தரமான, தீவிரமான போட்டிகளும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் ஒவ்வொரு முறையும் வாள்வீச்சில் இத்தாலி பதக்கம் வெல்ல தவறியது இல்லை.
பவானி தேவி கூறும்போது, “ஒலிம்பிக்கில் பங்கேற்பதன் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. எனது சிறந்த திறனை வெளிப்படுத்தி நாட்டை பெருமைப்படுத்துவேன். எனது பெற்றோரின் ஆதரவால்தான் சிரமங்களை சமாளித்து கடினமான சூழ்நிலைகளில் இருந்து என்னால் வெளிவர முடிந்தது. எனது அம்மாஎப்போதும் என்னை ஊக்கப்படுத்துவார். அவர், கரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை படுக்கையிலிருந்துபோது கூட, எனது இலக்கில் கவனம் செலுத்தக் கூறினார்” என்றார்.