Published : 24 Feb 2016 09:26 AM
Last Updated : 24 Feb 2016 09:26 AM

ஆசிய கோப்பை டி 20 தொடர்: முதல் ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் இன்று மோதல் - தோனி களமிறங்குவது சந்தேகம்

ஆசிய கோப்பை டி 20 தொடர் வங்கதேசத்தில் இன்று தொடங்குகிறது. மிர்பூரில் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே முதுகில் ஏற்பட்ட தசைப் பிடிப்பால் தோனி இன்று களமிறங்குவாரா என்பது சந்தேகமாக உள்ளது.

டி 20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 8ம் தேதி தொடங்க உள்ளதால் ஆசிய கோப்பை தொடர் அதற்கு சிறந்த முறையில் தயாராக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த அணிகளுக்கு உதவக்கூடும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் ஆசிய கோப்பை தொடரில் 2014ல் நடைபெற்ற தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முதல் முறையாக

எப்போதும் 50 ஓவர் வடிவில் நடத்தப்படும் இந்த தொடர் டி 20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு டி 20 வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் 14வது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன.

இறுதிப்போட்டியையும் சேர்த்து மொத்தம் 11 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதிக புள்ளிகள் பெறும் இரு அணிகள் மார்ச் 6ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

வங்கதேசத்துடன் மோதல்

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. மிர்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்தியான தனது இரண்டாவது ஆட்டத்தில் 27-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 1ம் தேதி இலங்கையுடனும், 3-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துடனும் மோதுகிறது.

குறுகிய கால வடிவ கிரிக்கெட்டுக்கு தகுந்த படி இந்திய அணி சமீபகால போட்டிகளில் வலுப்பெற்றுள்ளது. இந்த ஆண்டில் ஆறு டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி 5 வெற்றிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிரான டி 20 தொடரை வென்ற நிலையில் இந்திய அணி இந்த தொடரில் கலந்துகொள்கிறது.

தோனி சந்தேகம்

தோனி முதுகு தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவாரா என்பது நேற்று இரவு வரை அணி நிர்வாகத்தினரால் உறுதி செய்யப்படவில்லை. இலங்கை தொடரில் பங்கேற்காத விராட் கோலி ஆசிய கோப்பையில் விளையாடுகிறார். ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ரெய்னா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தொடர்ச்சி யாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

டி 20 உலகக்கோப்பை நெருங்குவதால் யுவராஜ்சிங்கும் திறமையை நிருபிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். கோலி அணிக்கு திரும்பி உள்ளதால் விளையாடும் லெவனில் அஜிங்க்ய ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். பந்து வீச்சில் இலங்கை தொடரில் தோனி கையாண்ட யுக்திகள் பலன் கொடுத்தது.

பும்ரா

அஸ்வின், நெஹ்ரா ஜோடியே இந்த தொடரிலும் புதுபந்தை கையில் எடுக்கும். ஜஸ்பிரிட் பும்ரா கடைசி கட்டத்தில் யார்க்கரில் சிறப்பாக செயல்படுவது அணிக்கு பலமாக உள்ளது. அவரது வித்தியாசமான ஆக்ஸன் (பந்து வீசும் முறை) இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு நிச்சயம் சவாலாக விளங்கும்.

சுழலில் பலம் சேர்க்க ஜடேஜா, ரெய்னா, யுவராஜ்சிங்கும் இருப்பதால் பந்து வீச்சு துறையை கையாள்வதில் கேப்டனுக்கு எந்தவித நெருக்கடியும் இருக்காது. இந்த தொடரை வென்று டி 20 உலகக்கோப்பையில் கால்பதிக்கும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது.

சொந்த மண் சாதகம்

சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வங்கதேச அணி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரை வென்றிருந்தது. இந்த தொடரில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் தனது இடது கை வேகப்பந்து வீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டினார். தற்போது இந்திய வீரர்கள் நல்ல பார்மில் இருப்பதால் ரஹ்மானுக்கு இன்றைய ஆட்டம் சவாலாகவே இருக்கக்கூடும்.

தஸ்கின் அகமது, அல்-அமீன் ஹொசைன் ஆகியோரும் பந்து வீச்சில் நேர்த்தியாக செயல்படக்கூடியவர்கள். அனுபவம் வாய்ந்த கேப்டன் மோர்டஸா, ஆல்ரவுண்டர் ஷகிப் அல்-ஹஸன், முன்னாள் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், பேட்ஸ்மேன்கள் சவுமியா சர்க்கார், முகமதுல்லா ஆகியோரும் அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். வங்கதேச அணி உள்ளூர் சாதகங்களை பயன்படுத்தி சவால் கொடுக்க தயாராக உள்ளது.

அணி விவரம்:

இந்தியா:

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஜிங்க்ய ரஹானே, ரவீந்திர ஜடேஜா, பார்த்திவ் படேல், ஹர்திக் பாண்டியா, ஆஷிஷ் நெஹ்ரா, அஷ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பவன் நேகி.

வங்கதேசம்:

மோர்டஸா (கேப்டன்), இம்ருல் கெய்ஸ், நுருல் ஹசன், சவுமியா சர்க்கார், நசீர் ஹொஸைன், ஷபீர் ரஹ்மான், மஹ்மதுல்லா ரியாத், முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன், அல்-அமீன் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்டாபிஜூர் ரஹ்மான், அபு ஹைதர், முகமது மிதுன் , அரபாத் ஷன்னி.



அஸ்வின்

அஸ்வின் கடந்த ஆறு டி 20 ஆட்டங்களில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரின் கடைசி ஆட்டத்தில் 8 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பேட்ஸ்மேன்களை பெரிய அளவிலான ஷாட்களை அடிக்க துண்டும் விதத்தில் லாவகமாக பந்து வீசி அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனை சமீபகால போட்டிகளில் பயன்படுத்தி வருவது சிறப்பம்சமாக உள்ளது. இந்த தொடரிலும் அஸ்வின் விக்கெட் வேட்டை நடத்தக்கூடும்.



ஆசிய கோப்பையின் பசுமை நினைவுகள்

* ஆசிய கோப்பை தொடர் 1984ல் ஆசிய கிரிக்கெட் அமைப்பால் தொடங்கப்பட்டது. முதல் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் பங்கேற்றன. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த தொடரை இந்தியா வென்றது.

* இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 2008ம் ஆண்டு தொடரின் இறுதி போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களை மிரள செய்தார். 273 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மென்டிஸின் மாய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியால் இந்திய அணி 39.3 ஓவரில் 173 ரன்களில் சுருண்டது. மென்டிஸ் 8 ஓவர்கள் வீசி 13 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தினார். அவர் வீசிய 36 பந்துகளில் ஒரு ரன்கள் கூட அடிக்கப்படவில்லை. தொடர் நாயகன், ஆட்ட நாயகன் விருதையும் மென்டிஸ் வென்றார்.

* சச்சின் சர்வதேச போட்டிகளில் தனது 100வது சதத்தை 2012ம் ஆண்டு தொடரில் நிறைவு செய்தார். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 147 பந்துகளில் 114 ரன்கள் அவர் எடுத்தார். துரதிருஷ்டவசமாக இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

* பாகிஸ்தானின் அப்ரீடி 2014ம் ஆண்டு தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் 18 பந்துகளில் 34 ரன்கள் விளாசி வெற்றியை பறித்து சென்றார். 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி ஓவரில் அப்ரீடி தலா 1 பவுண்டரியும், 1 சிக்ஸரும் விளாசி மிரட்டினார்.

* ஆப்கானிஸ்தான் அணி 2014ம் ஆண்டு தொடரில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதல் வெற்றியை பதிவு செய்தது. லீக் ஆட்டம் ஒன்றில் அந்த அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x