Published : 25 Jun 2014 08:29 AM
Last Updated : 25 Jun 2014 08:29 AM

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிஎப் சாம்பியன்

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஐசிஎப் அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னை சுங்க வரித்துறை அணியைத் தோற்கடித்து 29 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றது. ஐசிஎப் ஸ்டிரைக்கர் ஜெயக்குமார் 4 கோல்கள் அடித்து வெற்றி தேடித்தந்தார்.

ஐசிஎப் அணி 8 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியனாகியிருக்கிறது. முன்னதாக 2006-ல் ஐசிஎப் பட்டம் வென்றது. ஏரோஸ் அணி 28 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், இந்தியன் வங்கி 23 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சாம்பியனாகிவிடலாம் என்ற நிலையில் சுங்கத்துறை அணியை எதிர்கொண்டது ஐசிஎப். தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய ஐசிஎப் அணிக்கு 6, 20 மற்றும் 45-வது நிமிடங்களில் ஜெயக்குமார் ஹாட்ரிக் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத் தின் பெரும்பாலான நேரம் சுங்கத்துறை அணியே பந்தை வைத்திருந்தாலும், கோலடிக்க முடியவில்லை.

தொடர்ந்து போராடிய அந்த அணிக்கு 90-வது நிமிடத்தில் ராஜீவ் குட்டன் ஆறுதல் கோலை அடித்தார். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஞ்சுரி நேரத்தில் (90+1) 4-வது கோலை அடித்தார் ஐசிஎப் ஜெயக்குமார். இறுதியில் ஐசிஎப் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

ஐசிஎப் அணி இந்த முறை ஓர் ஆட்டத்தில்கூட தோற்காமல் சாம்பியன் ஆகியிருக்கிறது. வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஐசிஎப் பயிற்சியாளர் பார்த்தசாரதி துளசி, “எங்கள் அணியினர் ஒருங்கிணைந்து சிறப்பாக ஆடினர். ரயில்வேயுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றது திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு நடைபெற்ற எல்லா ஆட்டங்களிலும் எங்கள் அணி அபாரமாக ஆடியது. கோல் கீப்பர் சதீஷ்குமார் எங்களின் மிகப்பெரிய பலம். எஞ்சிய வீரர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆடி வெற்றி தேடித்தந்துள்ளனர். ரயில்வே அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் வெல்வதுதான் எங்களின் அடுத்த இலக்கு” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x