இந்திய ஹாக்கி அணி கேப்டன்: சர்தார் சிங் மீது பாலியல் புகார்

இந்திய ஹாக்கி அணி கேப்டன்: சர்தார் சிங் மீது பாலியல் புகார்
Updated on
1 min read

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் மீது, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹாக்கி வீராங்கனை, லூதியான காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

21 வயதான அந்த ஹாக்கி வீராங்கனை இந்திய வம்சாவழியாவார். இங்கிலாந்து மகளிர் ஹாக்கியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடி உள்ள இவர், பஞ்சாப் மாநிலம் லூதியானா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது எனக்கும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் பழகி வந்த நிலையில் 2014ம் ஆண்டு ஆலந்தில் நடைபெற்ற உலககோப்பை போட்டியின் போது அவர் என்னை விரும்புவதாக தெரிவித்தார்.

நிச்சயதார்த்தம்

தொடர்ந்து அவருடைய சொந்த கிராமத்துக்கு என்னை அழைத்து சென்றார். அங்கு அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவருடன் நெருங்கி பழகியதால் 2015ம் ஆண்டு நான் கர்ப்பம் ஆனேன். இதை சர்தாரிடம் தெரிவித்த போது, தற்போது குழந்தை நமக்கு தேவையில்லை. உடனடியாக கர்ப்பத்தை கலைத்துவிடு, இல்லாவிட்டால் நான் உன்னிடம் பேசவும் மாட்டேன், உன்னை தொடர்பு கொள்ளவும் மாட்டேன் என கூறினார்.

மிகவும் நெருக்கடி கொடுத்த அவர் மிரட்டவும் செய்தார். அத்துடன் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொந்தரவு கொடுத்தார். இதனால் எனது பெற்றோருடன் கலந்தாலோசித்து அதன்பின்னர் எனது கருவை கலைத்தேன். ஆனால் அதன் பிறகு சர்தார் சிங் என்னை சந்திப்பதை தவிர்ப்பதுடன் திருமணம் செய்துகொள்ளவும் மறுக்கிறார். என்னிடம் பொய்யான வார்த்தைகள் கூறி வஞ்ஜித்து ஏமாற்றிய சர்தார் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தனது புகாரில் கூறியுள்ளார்.

மறுப்பு

இந்த விவகாரம் தொடர்பாக சர்தார் சிங் கூறும்போது, "என் மீது புகார் கொடுத்த இளம்பெண்ணை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரை தாக்கியதாக கூறுவது தவறானது. மேலும் அவர் கூறுவது போன்று நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை. என் மீது தீவிரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தற்போது நான் இந்தியா ஹாக்கி லீக் போட்டியில் விளையாடி வருகிறேன்.

நேற்றைய போட்டி முடிவடைந்த பின்னர் தான் இந்த விவகாரம் குறித்து அறிந்தேன். புகார் தொடர்பான முழு தகவல்களும் கிடைத்த பின்னர் என்னுடைய வக்கீலுடன் ஆலோசனை நடத்துவேன். காவல்துறையினர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூற தயாராக உள்ளேன். அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்பதால் எனக்கு சிறிது கால அவகாசம் தேவை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in