

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரிகள் விளாசி வெற்றி தேடிக்கொடுத்தார்.
கேப்டவுனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. ஜாஸ் பட்லர் 32, அலெக்ஸ் ஹேல்ஸ் 27 ரன் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரன் தாகிர் 4, கைல் அபோட் 2 விக்கெட் கைப்பற்றினர். 3.4 ஓவரில் 38 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய அளவிலான இலக்கை கொடுக்க முடியாமல் போனது.
135 ரன்கள் இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோர்டான், அடில் ரஷித் ஆகியோர் நெருக்கடி கொடுத்தனர். ஆம்லா 22, டி வில்லியர்ஸ் 7, டு பிளெஸ்ஸி 25, டுமினி 23, ரோஸவ் 18, டேவிட் மில்லர் 13, டேவிட் வைஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.
ரீஸ் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் கைல்அபோட் 1 ரன் எடுத்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கும், 3வது பந்தை சிக்ஸருக்கும் விரட்டினார் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ். இதனால் நெருக்கடி குறைந்தது. 4வது பந்தை வீணடித்த மோரிஸ் 5வது பந்தில் 2 ரன் சேர்த்தார். கடைசி பந்தில் அவர் மேலும் 2 ரன் எடுக்க முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மோரிஸ் 7 பந்தில் 17 ரன்னுடனும், கைல் அபோட் 2 ரன்னுடனும் ஆட்டமிழக் காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக தென் ஆப்பிரிக்காவின் இம்ரன் தாகிர் தேர்வானார். 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி இரு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.