

மேற்கு வங்க மாநிலத்தில் தயாரிக்கப்படும் பீடிக்கட்டு உறையில் சர்வதேச கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கோபா அமெரிக்கக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரில் 4 கோல்கள் அடித்த மெஸ்ஸி, 5 கோல்கள் அடிக்க உதவியாக இருந்தமைக்காக, அவருக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தயாரிக்கப்படும் பீடிக்கட்டு உறையில் மெஸ்ஸியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதைக் கண்டுகொண்ட ஒருவர், அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்தியாவில் மெஸ்ஸி விளம்பரத் தூதராக இருக்கும் முதல் நிறுவனம் இது என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். மெஸ்ஸி பிரி என்று இந்த பீடிக்கட்டு உறையில் பெயர் எழுதப்பட்டுள்ளது.
மெஸ்ஸியை நேரடியாகக் குறிப்பிட்டு, ’நீங்கள் இதை விளம்பரம் செய்கிறீர்களா?’ என்று கேட்க ஆரம்பித்ததிலிருந்து, ’இதைப் பார்த்தால் மெஸ்ஸி கோப்பையைத் திரும்பக் கொடுத்துவிடுவார்’ என்று கலாய்க்கும் வரை இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் தங்களது நகைச்சுவை உணர்வுக்குத் தீனி போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர்.
இதேபோல மற்றொரு பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் முகம் அச்சடிக்கப்பட்டிருக்கும் பீடிக்கட்டு உறையின் புகைப்படம் ஒன்றையும் ஒரு பயனர் பகிர்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில் கால்பந்தாட்டம் மிக பிரபலம். எனவே, பீடிக்கட்டு உறைகளில் கால்பந்து வீரர்களின் முகங்கள் இடம்பெறுவது புதிதல்ல. கால்பந்து வீரர்களுக்கு நுரையீரல் அதிக ஆற்றலுடன் செயல்படும் என்பதால் பீடிக்கட்டுகளில் அவர்களின் முகங்களை அச்சடித்து விற்பனை செய்யும் வழக்கத்தைப் பல காலமாகவே பின்பற்றி வருகின்றனர்.