Last Updated : 14 Jul, 2021 05:38 PM

 

Published : 14 Jul 2021 05:38 PM
Last Updated : 14 Jul 2021 05:38 PM

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி விளையாடும் தொடர்கள் என்ன? புள்ளி முறையில் புதிய மாற்றம்

கோப்புப்படம்

துபாய்

2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் புள்ளிகளைக் கணக்கிடும் முறையில் புதிய மாற்றத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கொண்டுவந்துள்ளது.

அடுத்த மாதத்திலிருந்து இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகியவையும் 2021-23ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் பட்டியலில் சேர்க்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிக்கணக்கு என்பது குழப்பமான வகையில் இருந்தது. அதாவது இரு போட்டிகள் கொண்டதாக டெஸ்ட் தொடர் இருந்து 1-1 என்ற கணக்கில் சமனாக முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 60 புள்ளிகள் ஒதுக்கப்பட்டன. 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் தலா 40 புள்ளிகளும், 4 போட்டிகள் கொண்ட தொடருக்குத் தலா 30 புள்ளிகளும், 5 போட்டிகளுக்குத் தலா 24 புள்ளிகளும் வழங்கப்பட்டன. இருப்பினும், சில நேரங்களில் இந்தப் புள்ளிக்கணக்கைக் கணக்கிடுவதிலும் குழப்பம் நிலவியது.

ஐசிசி வெளியிட்ட புதிய புள்ளிக் கணக்கீடு முறை

இதையடுத்து 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து, புள்ளியைக் கணக்கிடும் முறையில் புதிய மாற்றத்தை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் வழங்கப்படும். போட்டி டையில் முடிந்தால், 6 புள்ளிகளும், சமனில் முடிந்தால் 4 புள்ளிகளும் வழங்கப்படும். எத்தனை போட்டிகள் கொண்ட தொடரோ அதற்கு ஏற்றாற்போல் புள்ளிகள் பிரிக்கப்படும்.

உதாரணமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி விளையாடி, அதில் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று, ஒரு போட்டி டிராவில் முடிந்தால், புதிய முறையின்படி இந்திய அணிக்கு 40 புள்ளிகள் கிடைக்கும், இங்கிலாந்து அணிக்கு 16 புள்ளிகள் கிடைக்கும்.

இதுகுறித்து ஐசிசி தலைமை நிர்வாகச் செயல் அதிகாரி ஜெஃப் அலார்டைஸ் கூறுகையில், “கடந்த ஆண்டு ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, புள்ளி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிமுறையில் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர்

கரோனா தொற்று காரணமாக, பெரும்பாலான தொடர்கள் முடியாத காரணத்தால், புள்ளிகள் மூலம் கிடைக்கும் சதவீதத்தில் அடிப்படையில் அணிகளின் தரவரிசை கணக்கிடப்பட்டது. இதன் மூலம் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணிகள் கணக்கிடப்பட்டு, குறித்த நேரத்தில் போட்டி நடத்தப்பட்டது. எதிர்காலத்திலும் அணிகளின் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை, ஒப்பீடு அடிப்படையில் புள்ளி கணக்கிடப்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு ஒவ்வொரு அணிக்கும் 6 தொடர்கள் கணக்கில் கொள்ளப்படும். அதில் உள்நாட்டில் நடக்கும் 3 போட்டித் தொடர்களும், வெளிநாட்டில் நடக்கும் 3 டெஸ்ட் தொடர்களும் கணக்கில் எடுக்கப்படும். 2023, மார்ச் 31-ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டிகளின் புள்ளிகள் மட்டுமே கணக்கிடப்படும்''.

இவ்வாறு ஜெஃப் அலார்டைஸ் தெரிவித்தார்.

இதன்படி இந்திய அணிக்கு அடுத்த மாதமே சோதனை காத்திருக்கிறது. இங்கிலாந்துடன் நடக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தவிர, தென் ஆப்பிரிக்கா, வங்க தேசத்தில் நடக்கும் டெஸ்ட் தொடர்களும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் எடுக்கப்படும்.

இலங்கை, நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இந்தியாவில் பயணம் செய்து இந்திய அணியுடன் டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் கொள்ளப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x