

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹேல்ஸ் 50 ரன் சேர்த்தார். ஜோ ரூட் 124 பந்துகளில், 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 109 ரன் எடுத்தார்.
108 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வோக்ஸ் மற்றும் ரஷித் ஆகியோருடன் இணைந்து போராடும் அளவுக்கான இலக்கை கொடுக்க ஜோ ரூட் உதவினார். வோக்ஸ் 33, ரஷித் 39 ரன் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4 விக்கெட் கைப்பற்றினார்.
263 ரன்கள் இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 47.2 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆம்லா 0, குயின்டன் டி காக் 27, டுபிபௌஸ்ஸி 34, டி வில்லியர்ஸ் 36, டுமினி 31, பெஹார்தின் 38, வைஸ் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். 8வது வீரராக களமிறங்கிய கிறிஸ் மோரிஸ் 38 பந்தில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.
47.1 ஓவரில் ஸ்கோர் சமநிலையை பெற்ற போது மோரிஸ் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய இம்ரன் தஹிர், தான் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விளாச தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலை அடைந்துள்ளது.
8வது இடத்தில் களமிறங்கிய வீரர்களில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் யாருமே இதுவரை இலக்கை துரத்தும் போது இவ்வளவு அதிக ரன்களை எடுத்ததில்லை. கடைசியாக குளூஸ்நர் 2000ம் ஆண்டு ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உதவியிருந்தார். தற்போது இந்த இடத்தில் களமிறங்கி 62 ரன்கள் எடுத்ததன் மூலம் அதிக ரன்கள் சேர்த்தவர் என்ற பெருமையை மோரிஸ் பெற்றுள்ளார். கடைசி போட்டி கேப்டவுனில் இன்று, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.