Published : 12 Jul 2021 07:01 PM
Last Updated : 12 Jul 2021 07:01 PM

வீரர்களுக்கு எதிரான நிறவெறித் தாக்குதலை மன்னிக்க முடியாது: இங்கிலாந்து கால்பந்து அணி மேனேஜர் காட்டம்

இங்கிலாந்து வீரர்களுக்கு எதிரான நிறவெறி, இனவெறித் தாக்குதலை மன்னிக்க முடியாது என்று அந்த அணியின் மேனேஜர் கரேத் சவுத்கேட் தெரிவித்தார்.

லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடந்த யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி மோதியது. இதில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்ததையடுத்து, பெனால்டி சூட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கணக்கில் இத்தாலி அணி வென்று 50 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை வென்றது.

இதில் இங்கிலாந்து அணியில் கேப்டன் கேன், மெக்குயிர் இருவரும் பெனால்டி சூட்டில் கோல் அடித்தனர். ஆனால், மற்ற 3 வீரர்களான மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சான்சோ, சாகா ஆகியோர் அடித்த கோல்களை இத்தாலி கோல்கீப்பர் டோனாருமா தடுத்துவிட்டார். இதில் இங்கிலாந்து தரப்பில் கோல் அடிக்கத் தவறிய 3 வீரர்களுமே கறுப்பின வீரர்கள்.

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு இந்த 3 கறுப்பின வீரர்களும் காரணமாகிவிட்டதாகக் கூறி சமூக வலைதளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் நிறவெறி, இனவெறிப் பதிவுகளை இடத் தொடங்கினர். இப்பதிவுகள்தான் தற்போது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த நிறவெறி, இனவெறிப் பதிவுகள் மன்னிக்க முடியாதவை என்று இங்கிலாந்து கால்பந்து அணியின் மேனேஜர் கரேத் சவுத்கேட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “இங்கிலாந்து வீரர்கள் மீதான இனவெறி, நிறவெறித் தாக்குதல்கள் மன்னிக்க முடியாதவை. நாட்டின் தேசிய அணி என்பது அனைத்து மக்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது. இது தொடர வேண்டும். நாம் நமது நாட்டின் ஒற்றுமையைக் காண வேண்டும். யார் பெனால்டியில் பங்குபெற வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்தேன். எந்த வீரரும் தானாக முன்வருவதில்லை” என்று கரேத் சவுத்கேட் தெரிவித்தார்.

நிறவெறிப் பதிவுகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x