

லண்டனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியிடம் அடைந்த தோல்வியைப் பொறுத்துக்கொள்ளாத இங்கிலாந்து ரசிகர்கள் சொந்த நாட்டு அணியில் உள்ள கறுப்பின ரசிகர்கள் மீதே இனவெறியுடன் பேசியதற்கு பீட்டர்ஸன், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நேற்று நடந்த யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி மோதியது.
இதில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்ததையடுத்து, பெனால்டி சூட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கணக்கில் இத்தாலி அணி வென்று 50 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை வென்றது.
இதில் இங்கிலாந்து அணியில் கேப்டன் கேன், மெக்குயிர் இருவரும் பெனால்டி சூட்டில் கோல் அடித்தனர். ஆனால், மற்ற 3 வீரர்களான மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சான்சோ, சாகா ஆகியோர் அடித்த கோல்களை இத்தாலி கோல்கீப்பர் டோனாருமா தடுத்துவிட்டார். இதில் இங்கிலாந்து தரப்பில் கோல் அடிக்கத் தவறிய 3 வீரர்களுமே கறுப்பின வீரர்கள்.
இங்கிலாந்து அணியின் தோல்விக்கு இந்த 3 கறுப்பின வீரர்களும் காரணமாகிவிட்டதாகக் கூறி சமூக வலைதளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் நிறவெறி, இனவெறியின் உச்சத்துக்குச் சென்று விமர்சித்தனர்.
பண்பாளர்களாக, நாகரிகம் தெரிந்த ரசிகர்களாக இருந்துவந்த இங்கிலாந்து ரசிகர்கள் தோல்வியைச் சகிக்க முடியாமல் 3 வீரர்களையும், தேசத்தோடும், நிறவெறியோடும் தொடர்புபடுத்தி விமர்சித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலக அளவில் கால்பந்து ரசிகர்களும், நிர்வாகிகளும் இந்த நிறவெறி விமர்சனங்களால் மிகுந்த வேதனை அடைந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கண்டனத்தில், “எங்கள் காரில், நான் வீட்டுக்குச் செல்லும்போது நான் பார்த்த காட்சிகள் மோசமானவை. இதுதான் 2021-ம் ஆண்டில் நமது நடத்தையா? வீரர்களை அவமானப்படுத்துவது யாருக்கு மகிழ்ச்சியைத் தரும்? உண்மையில் 2030ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்த இங்கிலாந்துக்குத் தகுதி இருக்கிறதா?” எனத் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் நிறவெறிப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நமது ஹீரோக்கள் புகழ்வதற்குத் தகுதியானவர்கள். நிறவெறியுடன் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. சமூக வலைதளத்தில் நிறவெறியுடன் கருத்துகளைப் பதிவிட்டவர்கள் கண்டிப்பாக தங்களைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கால்பந்து அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “இங்கிலாந்து வீரர்கள் மீதான நிறவெறி, இனவெறிப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்தத் தொடர் முழுவதும் நிறவெறி தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளது.
பீட்டர்ஸன் மற்றொரு ட்விட்டர் கருத்தில், “பிரிட்டனில் உள்ள ஊடகங்கள் உலகிலேயே சக்தி வாய்ந்தவை. அவையும் பொறுப்புடன் நடக்க வேண்டும். நிறவெறியுடன் பேசியவர்கள், கருத்துகளைப் பதிவிட்டவர்கள் கருத்தை சமூக வலைதளம் கண்டுபிடிக்க வேண்டும். ரோபாட் கருத்து கூறவில்லை. போலிக் கணக்கில் யாரும் கருத்துப் பதிவிடவில்லை. இதுபோன்ற கருத்துகள் சமூகத்தை அழித்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.