Last Updated : 12 Jul, 2021 05:01 PM

 

Published : 12 Jul 2021 05:01 PM
Last Updated : 12 Jul 2021 05:01 PM

4.5 கோடி அர்ஜெண்டினா மக்களுக்கும், டீகோவுக்கும் கோபா வெற்றியை அர்ப்பணிக்கிறேன்: மெஸ்ஸி உருக்கம்

அர்ஜெண்டினா கேப்டன் லயோனல் மெஸ்ஸி | படம்: ஏஎன்ஐ.

பியுனோஸ் அயர்ஸ்

4.5 கோடி அர்ஜெண்டினா மக்களுக்கும், டீகோ மாரடோனாவுக்கும் கோபா அமெரிக்க கோப்பையை நான் அர்ப்பணிக்கிறேன் என்று அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

6 முறை தங்கப் பந்து விருது வாங்கிய மெஸ்ஸி, தான் பிறந்த மண்ணுக்குச் சொந்தமான தேசிய அணிக்கு ஒருமுறைகூட கோப்பையை வென்று கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.

கோபா அமெரிக்க கோப்பை இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தத் தொடரில் 4 கோல்கள் அடித்த மெஸ்ஸி, 5 கோல்கள் அடிக்க உதவியாக இருந்தமைக்காக, அவருக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது. 28 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜெண்டினா கோபா அமெரிக்க கோப்பையை வென்றதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லயோனல் மெஸ்ஸி உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியாதவது:

''உண்மையில் இந்த கோபா அமெரிக்க கோப்பை நம்பமுடியாத வகையில் இருக்கிறது. இன்னும் அதிகமான விஷயங்களை நம்மால் மேம்படுத்த முடியும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், எங்கள் அணி வீரர்களே அனைத்தையும் கொடுத்தார்கள். இந்த அருமையான அணிக்கு கேப்டனாக இருப்பதில் நான் பெருமை கொள்ளாமல் இருக்க முடியாது.

இந்த வெற்றியை எனக்கு எப்போதும் வலிமையையும், முன்னோக்கிச் செல்லவும் ஊக்கமாக இருக்கும் எனது குடும்பத்தார், எனது நண்பர்கள் ஆகியோருக்கும், என்னை நம்பும் அனைவருக்கும், விரும்பும் அனைவருக்கும், கடினமான பெருந்தொற்றுக் காலத்திலும் ஆதரவாக இருந்த 4.50 கோடி அர்ஜெண்டினா மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். குறிப்பாக என்னைத் தனிப்பட்ட முறையில் பாதித்தவர்களுக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.

இந்த வெற்றி அனைவருக்குமானது. குறிப்பாக மறைந்த டீகோ மாரடோனாவுக்குமானது. எங்கிருந்தாலும் டீகோ எங்களுக்கு ஆதரவாக இருந்திருப்பார். வெற்றியைத் தொடர்ந்து கொண்டாடும் அதே நேரத்தில், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

இயல்புநிலைக்குத் திரும்ப இன்னும் நாம் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. வைரஸை எதிர்த்து ஒன்றாக இணைந்து போராடுவதற்கு இந்த வெற்றியும், மகிழ்ச்சியும் சிறிய அளவு ஊக்கத்தை அளிக்கும்''.

இவ்வாறு மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x