Published : 12 Jul 2021 02:58 PM
Last Updated : 12 Jul 2021 02:58 PM

ஐசிசி கோப்பையைப் பற்றிக் கேட்கிறீர்கள்; அவர் ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்லவில்லை: கோலியைக் கிண்டலடித்த ரெய்னா

சுரேஷ் ரெய்னா, விராட் கோலி | கோப்புப்படம்

மும்பை

ஐசிசி கோப்பையைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால், விராட் கோலியால் இன்னும் ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணி வீரருமான சுரேஷ் ரெய்னா கிண்டலடித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி மூன்று பிரிவுகளிலும் நீடிப்பது சரியானதுதானா என்பது குறித்துப் பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்திய டெஸ்ட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக 33 வெற்றிகளுடன் கோலி தொடர்கிறார்.

ஆனால், இதுவரை ஐசிசி சார்பில் நடத்தப்படும் ஒரு கோப்பையைக் கூட கோலி தலைமையில் இந்திய அணி வென்றதில்லை. 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பின்ஸ் டிராபி, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என அனைத்திலும் இறுதிவரை சென்றும் கோலியால் கோப்பையை வென்றுதர முடியவில்லை.

அதேசமயம், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் கேப்டனாக நீண்டகாலமாகத் தொடரும் கோலியால் அந்த அணிக்கு இதுவரை ஒரு கோப்பையைக்கூட பெற்றுத் தரமுடியவில்லை. இதனால் சிறந்த வீரராக கோலியைக் கருதலாம், ஆனால், வெற்றிகரமான வீரராகக் கருத முடியாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''விராட் கோலி நம்பர் ஒன் கேப்டன் என்பதில் சந்தேகமில்லை என்று நினைக்கிறேன். விராட் கோலி நிகழ்த்திய சாதனையின் மூலம் இதை நாம் உணர்ந்து கொள்ளலாம். உலக கிரிக்கெட்டிலும் விராட் கோலி நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அதற்கான பல சாதனைகளை விராட் கோலி செய்துள்ளார்.

ஆனால், ஐசிசி கோப்பை பற்றி நீங்கள் கேட்டால், விராட் கோலி தலைமையில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக் கூட இந்திய அணி வென்றதில்லை. ஐபிஎல் தொடரில்கூட கோலியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

என்னைப் பொறுத்தவரை கோலிக்கு இன்னும்கூட சிறிதுகால அவகாசம் கொடுக்கலாம். டி20 உலகக் கோப்பை வருகிறது. அதன்பின் ஒருநாள் உலகக் கோப்பை வருகிறது. இவை இரண்டிலும் கோலிக்கு வாய்ப்பளிக்கலாம். இந்த இரு போட்டிகளிலும் இறுதிப் போட்டியை அடைவது என்பது சாதாரணமானது அல்ல. சில தவறுகள் செய்தாலும் வாய்ப்பை இழந்துவிடுவோம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தமைக்கு காலநிலை ஒரு காரணமல்ல, பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததே காரணமாகும். 2 நாட்கள் முழுமையாக மழையால் பாதிக்கப்பட்டாலும், கடைசியில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிட்டது.

இந்திய அணி 4 செஷன்களிலும் பேட் செய்திருக்க வேண்டும். 2-வது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், 139 ரன்களை நியூஸிலாந்து எளிதாக சேஸிங் செய்து கோப்பையை வென்றுவிட்டது. அணியில் உள்ள மூத்த வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேட் செய்ய வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரு சிறந்த உதாரணம். காலநிலையைப் பற்றி சிலர் பேசுகிறார்கள், ஆனால், இந்திய அணியின் பேட்டிங் சரியில்லை என்று நான் நினைக்கிறேன். அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துப் பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும்''.

இவ்வாறு ரெய்னா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x