

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடந்து வரும்போது, வங்கதேச அணியில் பிரபலமான ஆல்ரவுண்டர் மகமதுல்லா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
ஹராரே நகரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 468 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் மகமதுல்லா 150 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
298 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 4-வது நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்துள்ளது வங்கதேசம் அணி.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிய இன்னும் ஒருநாள் இருக்கும்போது போட்டியின் நடுப்பகுதியில் மகமதுல்லா ஓய்வு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அந்த அணிக்கு அளித்துள்ளது.
வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் மகமதுல்லா திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அணியின் சகவீரர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜ்முல் ஹசன் கூறுகையில், “ மகமதுல்லாவின் ஓய்வு குறித்த திடீர் முடிவு வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு முன்கூட்டி தெரியாது. போட்டி நடக்கும்போது நடுவழியில் மகமதுல்லா ஓய்வு அறிவிப்பது அணிக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும். வழக்கத்துக்கு மாறானதாக இருக்கிறது.
எனக்கு நேரடியாகவோ, அதிகாரபூர்வமாகவோ தெரிவிக்கவில்லை. ஆனால், சிலர் எனக்கு தொலைபேசி மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்கள். இனிமேல் மகமதுல்லா டெஸ்ட் போட்டியில் விளையாடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார், ஓய்வு அறிவித்துள்ளார் எனத் தெரிவித்தனர்.
ஓய்வு அறையில் உள்ள சகவீரர்களிடமும், நான் வித்தியாசமாக உணர்கிறேன், என்னால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என மகமதுல்லா உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
இந்த முடிவு நிச்சயம் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது ஏற்றுக்கொள்ள முடியாத முடிவு. அவருக்கு விளையாட விருப்பம் இல்லையென்றால், எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்காக தொடரின் நடுப்பகுதியில் குழப்பம் விளைவிக்க கூடாது” எனத் தெரிவித்தார்.
வங்கதேச வீரர் மகமதுல்லா இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 2,764 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 4 சதங்கள்,16 அரை சதங்கள் அடங்கும்.