

இங்கிலாந்துக்கு எதிரான 20 - 20 ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பிடித்த அற்புதமான கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட 20 - 20 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி நார்தாம்டனில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழந்து, 177 ரன்களை எடுத்தது.
அடுத்து விளையாடிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை எடுத்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிலேயே நிறுத்தப்பட்டு டக்வொர்த் லூயிஸ் முறையின் படி 18 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும்போது, ஏமி எலனின் அதிரடியான ஆட்டத்தை ஹர்லீன் தியோலின் அற்புதமான கேட்ச் முடிவுக்குக் கொண்டுவந்தது. இங்கிலாந்து அணியின் வெற்றியைவிட ஹர்லீனின் அந்த கேட்ச்சைத்தான் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஹர்லீன் பிடித்த கேட்ச்சை இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்டோரும் பாராட்டியுள்ளனர்.